வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 29 ஜூன் 2015 (16:02 IST)

மெட்ரோ ரயிலுக்கு ஸ்டாலின் வாழ்த்து; சென்னை மக்களின் ஆசை நிறைவேறியதாக கருத்து

மெட்ரோ ரயிலுக்காக நீண்ட நாள் காத்திருந்த சென்னை மக்களின் ஆசை இன்று நிறைவேறியுள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மெட்ரோ ரயில் இன்று துவக்கி வைக்கப்படுகிறது என்ற இனிமையான செய்தி எனக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. உலக தரத்திலான விரைவு போக்குவரத்து வசதிகளை சென்னை மாநகர மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தலைவர் கலைஞர் தலைமையிலான கழக அரசால் உருவாக்கப்பட்ட திட்டம் தான் சென்னை மெட்ரோ ரயில் திட்டம்.
 
2006-2011இல் ஆட்சியிலிருந்த போது 7.11.2007 அன்று நடைபெற்ற கழக அமைச்சரவையின் கூட்டத்தில் 14600 கோடி ரூபாய் மதிப்புள்ள மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப்பேற்றிருந்த நான் இத்திட்டத்திற்கு நிதியுதவி பெறுவதற்காக ஜப்பான் நாட்டிற்கு சென்று அதில் வெற்றியும் கண்டேன்.
 
2009ஆம் வருடம் துவங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் கழக ஆட்சியில் விரைவாக நடைபெற்று வந்தன. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அற்ப அரசியல் காரணங்களுக்காக இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டாலும், இறுதியில் மெட்ரோ ரயிலுக்காக நீண்ட நாள் காத்திருந்த சென்னை மக்களின் ஆசை இன்று நிறைவேறியுள்ளது.
 
மெட்ரோ ரயில் இயக்கப்படுவதால் சென்னை மாநகர மக்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். பயணிகளின் பயண நேரம் குறையும். மக்கள் மாசற்ற காற்றை சுவாசிக்க முடியும். விபத்துக்களையும், மரணங்களையும் தவிர்த்து, மக்கள் போக்குவரத்து நெருக்கடியால் படும் சிரமங்களைப் போக்க முடியும். நகரம் வளரும் போது இது போன்ற அதி விரைவு போக்குவரத்து வசதிகளை உருவாக்கிக் கொடுப்பது மிக முக்கியம்.
 
"ஒரு மாநகரம் முன்னேறியிருக்கிறது என்பதற்கு என்ன அடையாளம்" என்ற கேள்விக்கு பதிலளித்த போகோட்டா முன்னாள் மேயர் ஒருவர், "ஒரு மாநகரத்தில் ஏழைகள் காரில் பயணிக்கிறார்கள் என்று பெருமை கொள்வதை விட, பணக்காரர்களும் அரசு போக்குவரத்தை பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் அந்த மாநகரம் முன்னேறிவிட்டது என்பதற்கு அடையாளம்" என்று கூறியிருக்கிறார். அந்த வகையில், முன்னேறிக் கொண்டிருக்கும் மாநகரம் சென்னை என்பதற்கு இப்போது இயக்கப்படும் மெட்ரோ ரயில் ஒரு மிகச் சிறந்த உதாரணம்.
 
மெட்ரோ ரயில் இயக்கப்படும் இந்த நாளில், இத் திட்டத்தை சென்னை முழுவதும் உள்ள மக்கள் பயன் பெறும் வகையில் விரிவாக்கம் செய்ய வேண்டும். அத்துடன் மாநிலத்தின் உள்ள பிற நகரங்களையும் இந்த மெட்ரோ ரயில் சேவையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.