வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2017 (09:53 IST)

தினகரன் போட்ட முதல் பந்துவே டக் அவுட்? - நடந்தது என்ன?

அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தங்களுக்கு ஒதுக்கிய பதவிகளை தாங்கள் ஏற்கப்போவதில்லை என நான்கு எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


 

 
இரண்டு மாதங்கள் பொறுமையாக இருப்பேன் என தினகரன் கூறிய கெடு கடந்த 4ம் தேதியோடு முடிவடைந்தது. இதையடுத்து அவர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அதிமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார். 
 
அதாவது, அமைப்பு செயலாளர்களாக பழனியப்பன், செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாசலம், கு.ப. கிருஷ்ணன், ஜக்கையன், மேலூர் சாமி ஆகியோரும்,  கொள்கை பரப்பு துணை செயலாளர்களாக நாஞ்சில் சம்பத் மற்றும் இளவரசன் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். மொத்தமாக 60 பேருக்கு பதவிகள் வழங்கப்பட்டது. அதில் 20 பேர் எம்.எல்.ஏக்கள் ஆவர்.
 
அதில் மாநில மகளிர் அணி இணை செயலாளராக நியமிக்கப்பட்ட பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ சத்யா பன்னீர் செல்வம், ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளராக நியமிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ பழனி, விவசாய அணி இணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ ஏ.கே.போஸ், மருத்துவ அணி இணைச்செயலாளராக நியமிக்கப்பட்ட பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் கதிர்காமு ஆகியோர் தினகரன் தாங்களுக்கு அளித்த பதவிகளை ஏற்க முடியாது எனவும், தாங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடர்ந்து கட்சிப்பணியை தொடரப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.
 
60 நாட்கள் காத்திருந்து, மீண்டும் கட்சிப் பணியாற்றுவேன் எனக்கூறி களத்தில் இறங்கி, புதிய நிர்வாகிகள் பட்டியலை அறிவித்தார் தினகரன். ஆனால், அதில் பலர் அவர் கொடுத்த பதவிகளை ஏற்காமல், தாங்கள் எடப்பாடி தலைமையிலேயே செயல்படப்போவதாக அறிவித்திருப்பது தினகரன் தரப்பிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.