வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 29 மே 2015 (01:01 IST)

மீண்டும் சிறைக் கதவுகளுக்குள் தள்ளப்பட்டார் அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி

முன்னாள் அதிமுக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண்பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் ஆகியோர் மீண்டும் சிறையில் இருக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
 
நெல்லையில், வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், அதிமுக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண் பொறியியல்துறை தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. ஆனால் அதை அவர்கள் மறுத்தனர்.
 
இதனையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி காவல்துறையினர், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட,  அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் வேளாண் பொறியியல்துறை தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏப்ரல் 5ம் தேதி முதல், சுமார் 2 மாதங்கள், நெல்லை மத்திய சிறையில் இவர்கள் இருவரும் உள்ளனர்.
 
ஆனால், அதிமுக முன்னாள் அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தனக்கு ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் மூன்று முறை அவரது மனு நிராகரிக்கப்பட்டது. 
 
இந்நிலையில், இவர்களது சிறைக்காவல் தேதி  மே 28 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து,  நெல்லை, முதலாவது நீதிமன்ற மாஜிஸ்திரேட் ராமலிங்கம், 
வீடியோ கான்பரன்ஸ் மூலமாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி, செந்தில் ஆகியோரின் சிறைக்காவலை ஜூன் 11ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
 
இதனால், அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும்  வேளாண் பொறியியல்துறை தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோர் மீண்டும் சிறையில் இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.