வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 5 ஜூலை 2015 (04:22 IST)

நேரடி உணவு மானிய திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: அன்புமணி

உணவு மானியத்தை நேரடியாக குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தும் திட்டத்தை, மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
 
நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் உணவு தானியங்கள் மற்றும் மண்ணெண்ணெய்க்கான மானியத்தை நேரடியாக குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம் செப்டம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தல் கட்டமாக இந்தத் திட்டம் புதுச்சேரி, சண்டிகர் உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் அறிமுகம் செய்ய உள்ளனர்.
 
நேரடி உணவு மானியத் திட்டத்தின்படி, முதல்கட்டமாக ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மாதம் ரூ.500 முதல் ரூ.700 வரை மானியம் வழங்கப்படும். பின்பு, அரசால் நிர்ணயிக்கப்படும் உணவு தானியங்கள் மற்றும் மண்எண்ணெயின் கொள்முதல் விலைக்கு ஏற்ற வகையில் மானியத்தின் அளவு மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால், இந்த திட்டத்தின்படி உணவு தானியங்களையும், மண்எண்ணெயையும் இப்போது உள்ளது போன்றே நியாய விலைக்கடைகளில் முழு விலையை செலுத்திப் பெற்றுக் கொள்ள வேண்டுமா? அல்லது வெளிச்சந்தையில் வாங்க வேண்டுமா? என்பதை மத்திய அரசு இதுவரை தெளிவாக அறிவிக்கவில்லை.
 
கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட முயன்ற போது அதை பாமக கடுமையாக எதிர்த்தது. இதனால், இத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், அத்திட்டத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தற்போது உயிர் கொடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது.
 
நேரடி உணவு மானியத் திட்டத்தின் மூலம் உணவு மானியத்தில் ரூ.25,000 முதல் ரூ.30,000 கோடி மிச்சப்படுத்த முடியும் என மத்திய அரசு கருதுகிறது. ஆனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
 
இத்திட்டத்தின்படி நியாய விலைக்கடைகள் மூடப்பட்டால், அதன்பின்பு அரசு தரும் மானியத்தைக் கொண்டு வெளிச் சந்தைகளில் தான் உணவு தானியங்களை வாங்க வேண்டி இருக்கும். இது மக்களுக்கு எவ்வகையிலும் பயன் தராது.
 
உதாரணமாக, தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. நேரடி மானியத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் சுமார் ரூ.500 மானியம் கிடைக்கும். ஆனால், 20 கிலோ அரிசியும், 10 லிட்டர் மண்எண்ணெயும் வாங்க ரூ. 1,500 செலவாகும். இதனால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ரூ.1,000 இழப்பு ஏற்படும்.
 
அதுமட்டுமின்றி, நேரடி நெல் கொள்முதல் முறை ஒழிக்கப்பட்டால், உழவர்கள் தங்களின் விளைபொருட்களை தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்க நேரிடும். இது ஏழைகளுக்கும், உழவர்களுக்கும் மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்.
 
எனவே, சாந்தகுமார் குழு பரிந்துரைகளை நிராகரித்து உணவு மானியத்தை நேரடியாக குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தும் திட்டத்தையும் நிரந்தரமாக கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.