வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 10 அக்டோபர் 2015 (10:06 IST)

ரமணியின் மறைவு தமிழ் இசை உலகிற்கு பெரும் இழப்பு: ஜெயலலிதா இரங்கல்

பிரபல புல்லாங்குழல் இசைக் கலைஞர் ரமணியின் மறைவு தமிழ் இசை உலகிற்கு பெரும் இழப்பு என்று கூறி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.


 

 
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
புல்லாங்குழல் இசைக் கருவிக்கு தனித்துவத்தையும், தனிச் சிறப்பையும் ஏற்படுத்திக் கொடுத்த "புல்லாங்குழல்" என்.ரமணி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்தேன்.
 
புல்லாங்குழல் இசை மேதையாக விளங்கிய என்.ரமணி 5 வயதிலேயே தனது இசை பயணத்தைத் தொடங்கியவர் ஆவார். தனது 22 ஆவது வயதிலேயே மியூசிக் அகாடமியில் புல்லாங்குழல் இசைக்கச்சேரி நடத்தியவர். பக்கவாத்தியமாக இருந்த புல்லாங்குழல் இசையை தனி இசையாக நடத்தியவர் ரமணி.
 
"சங்கீத கலாநிதி", "சங்கீத கலை சிகாமணி", "பத்மஸ்ரீ", "பத்மபூஷண்" என்று எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ள என்.ரமணி, புல்லாங்குழல் இசையில் தனக்கென தனி இடத்தைப் பெற்று பெரும் புகழை தனதாக்கிக் கொண்டவர்.
 
புல்லாங்குழல் இசை என்று சொன்னாலே என்.ரமணி உடன் இணைத்துச் சொல்லும் அளவிற்கு புல்லாங்குழல் இசையில் தன் புகழை நிலைநிறுத்தியவர் ரமணி.
 
ரமணியின் மறைவு தமிழ் இசை உலகிற்கு பெரும் இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கர்நாடக இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் ஜெயலலிதா கூறியுள்ளார்.