வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 28 நவம்பர் 2015 (21:18 IST)

வெள்ள நிவாரணம் - விஷால், சூர்யா, தனுஷ் லட்சக்கணக்கில் நிதியுதவி

தமிழக வெள்ள நிவாரணத்துக்கு நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால் ரூ.10 லட்சம், நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் ரூ.25 லட்சம், நடிகர் தனுஷ் ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.
 

 
தமிழகத்தில் இந்த ஆண்டு வட கிழக்குப் பருவமழை அக்டோபர் 28ஆம் தேதி தொடங்கியதை அடுத்து, கடந்த சில தினங்களாக பெய்த கன மழையால் பல இடங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. கனமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கடலூர் மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கியது.
 
இதனையடுத்து சில அரசுத்துறை பணியாளர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை வெள்ள நிவாரண நிதியாக அரசுக்கு வழங்கினர். இதனையடுத்து பிற மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் புயல் பாதிப்பிற்கு நிதியுதவி வழங்கிய தமிழ் நடிகர்கள் இது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாதது அதிர்ப்தியை ஏற்படுத்தி இருந்தது.
 
இந்நிலையில், தற்போது தமிழகத்தின் வெள்ள நிவாரண நிதிக்காக நடிகர்கள் நிதியுதவி அளிக்க தொடங்கி இருக்கிறார்கள். இதில் முதலாவதாக நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி ஒன்றிணைந்து நடிகர் சிவக்குமார் குடும்பத்தின் சார்பில் ரூ.25 லட்சம் காசோலையை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசரிடம் ஒப்படைத்தார் நடிகர் சூர்யா.
 
இதனையடுத்து, நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் 10 லட்சம் ரூபாய் காசோலையும், நடிகர் தனுஷ் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை நடிகர் சங்கத்தின் தலைவர் நாசரிடம் வழங்கினார். இந்தத் தொகையை முதல்வர் ஜெயலலிதாவிடம் அளிக்கப்பட உள்ளது.