வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 24 நவம்பர் 2015 (14:16 IST)

வெள்ள நிவாரணத்திற்கு ரூ.1 கோடி நிதி: தலைமைச் செயலகத்திற்குச் சென்று வழங்கினார் மு.க.ஸ்டாலின்

தமிழக வெள்ள நிவாரணத்திற்கு திமுக சாப்பில் அறிவித்திருந்த ரூ.1 கோடி நிதியை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திற்கு நேரில் சென்று வழங்கினார்.


 

 
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமைச் செயலகத்திற்குச் சென்று தமிழக அரசின் நிதித்துறை முதன்மை செயலாளர் சண்முகத்தை நேரில் சந்தித்து ரூ.1கோடிக்கான காசோலையை வழங்கினார்.
 
பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக சென்னை, கடலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு அதனால் பொதுமக்கள் உடமைகளை இழந்து தவித்து வருகிறார்கள்.
 
இந்த சூழ்நிலையில் திமுக சார்பில் வெள்ள நிவாரண நிதிக்காக ரூ.1 கோடி வழங்கப்படும் என்று தலைவர் கலைஞர் கடந்த 17 ஆம் தேதி அறிவித்திருந்தார்.
 
இந்த நிதியை முதலமைச்சர் அல்லது தலைமைச் செயலாளரிடம் வழங்குவதற்கு நேரம் கேட்டு தலைமைச் செயலக அலுவலகத்தில் நேரம் கேட்டோம். ஆனால் அலுவலகத்தில் உள்ளவர்கள், தலைமை செயலாளர் மீட்டிங்கில் உள்ளார் என்று தொடர்ந்து கூறிவந்தனர்.
 
இதனால் நேற்று நானே தலைமைச் செயலாளரின் செல்போன் எண்ணை கண்டுபிடித்து வாங்கி அவரிடம் ரூ.1 கோடி நிதியை வழங்குவதற்கு நேரம் ஒதுக்கித்தர வேண்டும் என்றேன்.
 
அவரும் பதில் சொல்கிறேன், சொல்கிறேன்.. என்று கூறினார். நீங்கள் நேரம் ஒதுக்காவிட்டால் நான் இதை அரசியலாக்க விரும்பவில்லை. திமுக அறிவித்த நிதியை இன்னும் வழங்காமல் இருக்கிறார்களே என்று மக்கள் நினைத்து விடக்கூடாதே என்பதற்காக பத்திரிகையாளரை சந்தித்து விளக்குவோம் என்று கூறினேன்.
 
தலைவர் கலைஞரும் இது குறித்து ஒரு அறிக்கையை வெளியட்டு இன்னும் நிதியை பெற்றுக்கொள்ள நேரம் ஒதுக்கித் தரவில்லை என்று கூறியிருந்தார். அதன்பிறகு நேற்று மாலை தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் இருந்து திமுகவுக்கு அழைப்பு வந்தது.
 
போனில் பேசியவர்கள் நிதித்துறை முதன்மை செயலாளரை சந்தித்து நிதியை வழங்குங்கள் என்றனர். அதை ஏற்று நிவாரண நிதி ரூ.1 கோடியை இன்று வழங்கினேன்.
 
அரசியல் நோக்கத்துக்காக இந்த நிதியை திமுக வழங்கவில்லை. மக்களுக்கு உதவுவதற்காக இந்த நிதி உடனே வழங்கப்பட்டுள்ளது. அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நிவாரண பணிகளுக்கு திமுக உதவும்.
 
நிவாரணப் பணியில் இணைந்து செயல்படுவார்கள் என்று கலைஞர் அறிவித்திருந்தார். அதற்காக அறிவாலயத்தில் மக்கள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்தில் குழுவும் அமைக்கப்பட்டது. அந்த வகையில் திமுக தனது பங்களிப்பை செய்து வருகிறது.
 
நான் கேட்கும் கேள்வி என்னவென்றால் வெள்ள தடுப்பு பணிகளுக்காக ஏற்கனவே அறிவித்த நிதி என்ன ஆனது? சட்டசபை கூட்டத்திலேயே முதலமைச்சர் அறிவித்து இருந்தாரே, அதில் கடலூருக்கு எவ்வளவு செலவழிக்கப்பட்டது, சென்னைக்கு எவ்வளவு செலவழிக்கப்பட்டது என்பது பற்றிய வெள்ளை அறிக்கை வேண்டும் என்று திமுக மட்டுமல்ல, அனைத்து கட்சியினரும் கேள்வி எழுப்பினர். இதுவரை இதற்கு பதில் இல்லை.
 
இப்போது நாங்கள் வழங்கிய நிதியைக் கூட பெற்றுக்கொள்ள தலைமைச் செயலாளர் நேரம் ஒதுக்கி தரவில்லை. ஆனால் நேற்று எம்.பி.க்கள் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடந்து இருக்கிறது. 
 
தலைமைச் செயலகத்தில் மரபை மீறி 2 ஆவது முறையாக எம்.பி.க்கள் கூட்டத்தை முதலமைச்சர் நடத்தி இருக்கிறார். இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் உட்கார்ந்து விட்டு வருகிறார். அதுதான் எங்களுக்கு வேதனையாக உள்ளது.
 
மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணத்துக்காக தமிழகத்துக்கு வழங்கிய நிதி போதுமானதா? இல்லையா? என்பது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.
 
ஆனால் வாங்கிய நிதியை முறையாக மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். 2011 ஆம் ஆண்டு முதலமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றபோது சென்னை நகரை ஹெலிகாப்டரில் பார்த்தபோது நிறைய பிளாஸ்டிக் பொருட்கள் தேங்கி கிடப்பதாக கூறினார்.
 
இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கியதாகவும் கூறியிருந்தார். இந்த நிதி செலவழிக்கப்பட்டதா? என்பதை விளக்க வேண்டும். வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஒருநாள் மட்டும் அதுவும் அரைமணி நேரம் ஆர்.கே.நகர் பகுதிக்கு வேனில் சென்று தேர்தல் பிரசாரம் செய்வதுபோல் பேசிவிட்டு வந்துள்ளார்.
 
இதுவரை அவர் வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களை சந்திக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காவிட்டாலும் நிவாரண பணிகளை முடுக்கி விட்டாரா? என்றால் இல்லை. பல இடங்களில் மக்கள் இன்னும் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டுதான் உள்ளனர்.
 
மாநகராட்சியும், அரசும் முழுமையாக செயல்படவில்லை. அமைச்சர்கள் மக்களை பார்க்க சென்று போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள். மக்கள் கேட்கும் கேள்வியைப் பார்த்து பதில் அளிக்க முடியாமல் திரும்புகிறார்கள். அனைத்து கட்சி குழு அமைத்து வெள்ள நிவாரண பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் அப்போது கூறினார்.