வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 1 ஜனவரி 2016 (12:35 IST)

சிங்களப் படை அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும்: ராமதாஸ்

இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் 76 பேரையும், மீனவர்களுக்கு சொந்தமான 61 படகுகளையும் மீட்க வேண்டும் என்றும் சிங்களப் படை அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


 

 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
நாகை மாவட்டம் அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்நாள் மாலை வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
 
கோடியக் கரைப்பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருந்த போது அங்கு வந்த சிங்களப் படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
 
அதைத் தொடர்ந்து அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த 29 மீனவர்களை அவர்களின் படகுகளுடன் சிறை பிடித்துச் சென்றனர்.
 
இலங்கை திரிகோணமலை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கூறி அவர்களை நீதிமன்றத்தில் சிங்களப்படையினர் நேர் நிறுத்தி சிறையில் அடைத்திருக்கின்றனர்.
 
உண்மையில் தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் தான் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். ஆனால், அத்துமீறி நுழைந்து மீனவர்களை கைது செய்ததுடன், அவர்கள் தான் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக சிங்களப் படை அபாண்டமாக பழி சுமத்தியுள்ளது. அண்மைக் காலமாகவே இந்திய எல்லைக்குள் சிங்களப் படை அத்துமீறி நுழைந்து மீனவர்களை கைது செய்வது அதிகரித்திருக்கிறது.
 
மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் அதை வேடிக்கைப் பார்ப்பதையும், மீனவர்களுக்கு ஆதரவாக பெரிய அளவில் போராட்டங்கள் வெடிக்கும் போது இலங்கை அரசுடன் பேசி அவர்களை விடுதலை செய்ய வைப்பதையும் மத்திய அரசு வாடிக்கையாக வைத்துக் கொண்டிருக்கிறது. இது சரியான அணுகுமுறை அல்ல.
 
தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் ஆன பிறகு அவர்களை மீட்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவர்கள் கைது செய்யப்படாமல் தடுப்பது தான் சிறப்பானதாக இருக்கும். அதைத்தான் மத்திய அரசு உடனடியாக செய்ய வேண்டும்.
 
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகவே இருந்தாலும் அவர்களை கைது செய்ய இலங்கை அரசுக்கு அதிகாரம் இல்லை.
 
ஏனெனில், இரு நாடுகளுக்கு இடையே கடல் எல்லை மிகவும் குறுகியதாக இருக்கும் போது, ஒரு நாட்டைச் சேர்ந்த மீனவர் இன்னொரு நாட்டின் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடிப்பது சட்டப்பூர்வமான உரிமையாகும்.
 
இதை பன்னாட்டு நீதிமன்றத் தீர்ப்புகள் பல்வேறு தருணங்களில் உறுதி செய்தி ருக்கின்றன. அவ்வாறு இருக்கும் போது எல்லை தாண்டினார்கள் என்ற குற்றச்சாற்றின் அடிப்படையில் தமிழக மீனவர்களை இலங்கை கைது செய்வது முறையல்ல.
 
இனிவரும் காலங்களில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க, பன்னாட்டு சட்டங்களின்படி வங்கக்கடல் பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை உறுதி செய்வதற்கான ஒப்பந்தத்தை இலங்கை இந்திய அரசுகள் செய்து கொள்ளவேண்டும்.
 
அதற்கு முன்பாக இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் 76 பேரையும், மீனவர்களுக்கு சொந்தமான 61 படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.