வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 30 ஜூன் 2016 (21:39 IST)

இருசக்கர வாகனத்தில் 108 ஆம்புலன்ஸ் முதலுதவி சேவை தொடக்கம்

மதுரை நகரப் பகுதிக்கான இருசக்கர வாகன 108 ஆம்புலன்ஸ் முதலுதவி சேவையை மக்களவை உறுப்பினர் ஆர்.கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் ஆகியோர் புதன்கிழமை தொடங்கி வைத்தனர்.


 

 
108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நுழைய முடியாத இடத்தில் சென்று முதலுதவி அளிக்கும் வகையில் இருசக்கர முதலுதவி வாகனத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிமுகம் செய்து வைத்தார். அதில், 31 வாகனங்கள் ஆண்கள் இயக்கும் மோட்டார் சைக்கிள் வடிவிலும், 10 வாகனங்கள் பெண்கள் இயக்கும் ஸ்கூட்டர் வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளன.  
மதுரை நகரப் பகுதிக்கு இரண்டு முதலுதவி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் பெரியார் பேருந்து நிலையம் மற்றும் ரிசர்வ் லைன் ஆகிய இடங்களில் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கும். செவிலிய உதவியாளர்கள் சுழற்சி முறையில் பணியில் இருப்பர். 
 
108 ஆம்புலன்ஸ் சேவையுடன் இணைந்து இச் சேவை செயல்படும்.  இருசக்கர முதலுதவி வாகனத்தில், கையில் எடுத்துச் செல்லக் கூடிய ஆக்ஸிஜன் சிலிண்டர், நாடித்துடிப்பைக் கண்டறியும் கருவி, ரத்த அழுத்தம் கண்டறியும் கருவி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்டறியும் சாதனம், உடல் வெப்பநிலைமானி மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் இருக்கும். அவசர ஒலி எழுப்பும் ஒலிபெருக்கி மற்றும் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும்.
 
குறுகிய பகுதிகளில் இருந்து உதவிகேட்டு அழைப்பு வரும்போது, உடனடியாகச் செல்லும் வகையில் முதலுதவி வாகனம் அனுப்பி வைக்கப்படும். பின்னர் வழக்கமான 108 ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவனைகளுக்கு பாதிக்கப்பட்டவர்கள் அழைத்துச் செல்லப்படுவர்.

மதுரை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின்கீழ் 25 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு வசதிகளுடன் கூடிய 3 ஆம்புலன்ஸ்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, திருமங்கலம் அரசு மருத்துவமனை, உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் இருந்து இயக்கப்படுகின்றன.