வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Aanadhakumar
Last Updated : செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (20:03 IST)

கோவிலுக்கு சொந்தம், கொண்டாடும் மக்கள்

கரூர் அருகே பணபலத்தை மட்டுமே கொண்டு கோயிலை கைப்பற்ற முயற்சிப்பதாகவும், உழைக்கும் வர்க்கத்தை சார்ந்தவர்களுக்கும் கோயில் சொந்தமென்று கூறி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


 


கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், ஆத்தூர் சோளியம்மன் கோயிலில் அனைத்து சமூக மக்களும் கும்பிட்டு வந்த நிலையில் ஒரு சமூக மக்கள் மட்டும் தான் இந்த கோயிலில் சாமிகும்பிட வேண்டுமென்று கூறி வருகின்றனர்.

கோயிலில் நடைப்பெறவுள்ள பலாலயம் மற்றும் கும்பாபிஷேகத்தை நாங்கள் தான் நடத்துவோம் என்று கூறி தற்போதே சர்ச்சை ஏற்படுத்தி வரும் நிலையில் கோயில் என்பது அனைவருக்கும் சொந்தமே தவிர ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டும் கும்பிடுவது எப்படி என்று மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜிடம் மனு கொடுத்தனர்.

நேற்றும், இன்றும் அமைதி பேச்சு வார்த்தை கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எங்கள் இனத்தவர் என்றும், எங்கள் தரப்பு மட்டுமே சாமி கும்பிடவும், கும்பாபிஷேகம் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் பங்கேற்க உரிமை உண்டு என்றும், மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறினர்.

அனைவரும் காலையில் இருந்து சுமார் மதியம் 2.45 மணி வரை சாப்பிடாமல் கூட சாமி கும்பிடுவதில் நீதி கேட்டு அமர்ந்த மக்களிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு காவல்துறையினர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறும் போது பண பலமும், அதிகார பலமும் மிக்கவர்கள் தான் இந்த கோயிலை வழிபட வேண்டுமென்றும், உழைக்கும் வர்க்கத்தை சார்ந்தவர்களுக்கு கோயிலில் சாமி கும்பிட கூட அனுமதி இல்லாததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் நியாயமான கோரிக்கை எங்களது நிறைவேற்றாத பட்சத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தோடு, கோயிலில் குடியேறுவோம் என்று எச்சரிக்கை மக்களால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே அரவக்குறிச்சி தொகுதி லிங்கத்துப்பாறையில் கோயிலில் சாமி கும்பிட நியாயம் கேட்டு பல்வேறு போராட்டங்கள் நடந்த நிலையில் தற்போது இந்த ஆத்தூர் சோளியம்மன் கோயில் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலை முதல் மதியம் வரை சுமார் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள், வயதான தாய்மார்கள், கைக்குழந்தைகளுடனும், இளைஞர்கள் என்று அனைத்து தரப்பினரும், நியாயம் கேட்டு கொளுத்தும் வெயிலையும் பாராமல் அமர்ந்த நிலையில், சொகுசு காரில் அமர்ந்த ஒரு சில பணக்காரர்களுக்கு ஆதரவாக நிர்வாகம் செயல்படுவதாகவும், கோயில் அறங்காவலர் குழுவை கலைத்து அனைத்து இன மக்களையும் கொண்டு நடத்த வேண்டுமென்றும், அரசே இந்த கும்பாபிஷேகத்தை நியாயமான முறையில் நடத்த வேண்டுமென்று என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.