1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 9 அக்டோபர் 2015 (05:15 IST)

வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவிக்கு ரூ 3 லட்சம்: ஜெயலலிதா உத்தரவு

சென்னையைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவிக்கு ரூ 3 லட்சம் வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
 

 
இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: -
 
விளையாட்டு மற்றும் இளைஞர் நல மேம்பாட்டில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடும் உயரிய நோக்கில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
 
கடந்த 2014 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை சி.ஏ. பவானி தேவி கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கமும், இந்த ஆண்டு மங்கோலியாவில் நடைபெற்ற வாள்வீச்சுப் போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கமும் வென்றார்.
 
இதுமட்டுமின்றி, காமன்வெல்த் ஜூனியர் வாள்வீச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களையும் வென்றுள்ளார். தற்போது, 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
 
இந்த நிலையில், சி.ஏ. பவானி தேவி இம்மாதம் வெனிசுவேலா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் வாள்வீச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில்,  வாள்வீச்சுப் போட்டிகளில் பங்கு கொள்ள ஏதுவாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ரூ 3 லட்சம் நிதியுதவி உடனே வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். மேலும், போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்று பதக்கம் பெற வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.