வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2016 (15:45 IST)

’உச்சிக்குச் சென்ற மகனை கீழே தள்ளிய தந்தை’ - ஜெ. சொன்ன அரசியல் கதை

’உச்சிக்குச் சென்ற மகனை கீழே தள்ளிய தந்தை’ - ஜெ. சொன்ன அரசியல் கதை

அதிமுக நிர்வாகிகள் இல்லத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா, உச்சிக்குச் சென்ற மகனை கீழே தள்ளிய தந்தையின் கதையை சொல்லி அசத்தினார்.
 

 
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், ஆர்.காமராஜ், எஸ்.பி.சண்முகநாதன், முக்கூர் என்.சுப்பிரமணியன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் 14 பேர்களின் இல்லத் திருமணங்களை, முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைதாங்கி நடத்தி வைத்தார்.
 
மனமக்களை வாழ்த்திய பின் ஜெயலலிதா கூறிய கதை: ”ஒரு சின்ன பையன் தனது தந்தையிடம் சென்று அப்பா எனக்கு அரசியல் பாடம் கற்றுக்கொடு என்கிறான். உடனே தந்தை, தனது மகனை பார்த்து, மகனே, அரசியல் பணி என்பது ஆபத்தானது. இதில் தந்தை, தனையன் என்றெல்லாம் உறவுகளுக்கு இடமில்லை. வலிமை உள்ளவரே வெல்ல முடியும். எனவே உனது அரசியல் பாடத்தை நீயேதான் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
 
தந்தை சொல்லை மகன் கேட்கவில்லை. அரசியல் பாடம் கற்பதில் பிடிவாதமாக இருந்தான். மகன், தந்தையே, உங்களை பார்த்து நான் அரசியலில் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். இருந்தாலும் எனக்கு நீங்கள் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றான். வேறு வழியின்றி தந்தையும் மகனுக்கு அரசியல் பாடம் கற்றுக் கொடுக்க சம்மதித்தார்.
 
மகனை அழைத்து ஓடிப்போய் ஒரு ஏணி எடுத்துக் கொண்டு வா என்றார். எதற்கு ஏணி என்று கேட்டான் மகன். இப்படியெல்லாம் கேட்க கூடாது. நான் சொல்வதை செய்ய வேண்டும் என்றார் தந்தை. மகன் ஏணியை எடுத்துக் கொண்டு வந்தார். இந்த சுவற்றிலே இந்த ஏணியை சாற்றி வை.
 
பிறகு ஏணியின் மீது ஏறி உச்சிக்கு செல். ஏணியில், நான் என்னென்ன ஏமாற்று வேலைகளை செய்து அரசியலில் நிலைத்து நிற்கிறேன் என்பதை பற்றி நெஞ்சை திறந்து எழுதி வைத்துள்ளேன். அரசியல் பற்றிய அனைத்து பாடங்களும் அவற்றில் உள்ளன. அதை கற்றுத்தேர்ந்தால் நீயும் அரசியலில் பெரிய ஆளாய் ஆகலாம் என்றார்.
 
அப்பா நான் ஏணியிலே ஏறி மேலே போகிறேன். நீ கீழே இருந்து ஏணியை கெட்டியாய் பிடித்துக் கொள் என்றான் மகன். அதைப் பற்றி நீ கவலைப்படாதே, நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார் தந்தையார். மகன் மெதுவாக ஏணியின் மேலே போனான். அவன் உச்சிக்கு போனதும், தந்தை ஏணியின் மீது இருந்த கையை எடுத்து விட்டார். ஏணி சரிந்து விழுந்தது. மகனும் கீழே விழுந்து விட்டான்.
 
வலி தாங்காமல் இடுப்பை பிடித்துக் கொண்டே எழுந்தான் மகன். என்னப்பா, இப்படி ஏணியில் இருந்து கையை எடுத்து விட்டாயே. உன்னால்தான் இப்போது எனக்கு இடுப்பில் அடிபட்டு இருக்கிறது என்று கூச்சலிட்டான். தந்தை சிரித்துக் கொண்டே எல்லாவற்றையும் நீ இப்போதே தெரிந்து கொண்டால் என்னை யார் மதிப்பார்கள் என்று கேட்டார்.
 
இதுதான் அரசியலில் முதல் பாடம் என்று தெரிந்து கொண்ட மகன், அப்பனாக இருந்தாலும் நம்பக் கூடாது. நம்மை நாமேதான் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தான் மகன். சரி எவ்வளவு தூரம்தான் இவன் தன்னை வளர்த்துக் கொள்கிறான் என்று பார்ப்போம் என நினைத்த தந்தை சிறிது விட்டுப்பிடித்து பின்னர் மகனுக்கு கடிவாளம் போட்டு விட்டார். 
 
அரசியல் எவ்வளவு ஆபத்தானது என்பதற்காகத்தான் நான் இந்த கதையை இங்கே கூறினேனே தவிர, நீங்கள் யாரையாவது கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல" என்று கூறினார்.