வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 21 நவம்பர் 2014 (17:49 IST)

கர்நாடகா புதிய அணைகள் கட்டுவதை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் நாளை முழுஅடைப்பு

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா புதிய அணைகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. 500 இடங்களில் சாலை மறியலிலும், ரயில் மறியலிலும் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
மேட்டூருக்கு தண்ணீர் வரும் வழியில் மேகதாது, ராசி மணல் ஆகிய இடங்களில் கர்நாடக அரசு 2 அணைகளை கட்டி 48 டிஎம்சி தண்ணீரை தேக்க முடிவு செய்துள்ளது. அந்த மாநிலத்தின் குடிநீர் தேவைக்காக இந்த அணைகளை கட்டப்போவதாகவும், தமிழகம் இதனை தடுத்தாலும் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. ஆனால் எதிர்காலத்தில் இங்கிருந்து பாசன பரப்பை அதிகபடுத்த வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தமிழகத்துக்கு உபரி நீர் கூட வராமல் போய்விடும். இதனால் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் அபாயம் உள்ளது. கர்நாடக அரசின் இந்த திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
 
இதற்கிடையே கர்நாடக அரசு புதிய அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை ஆணையத்தை உடனே அமைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நாளை (22 ஆம் தேதி) திருவாரூர் மாவட்ட அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.
 
முழு அடைப்பு போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, பாமக, தேமுதிக, ஜி.கே.வாசன் கட்சி, சமக, நாம் தமிழர் கட்சி, மமக, திராவிடர் விடுதலைக் கழகம் உள்பட 25 கட்சிகள், வணிகர் சங்கங்கள், வழக்கறிஞர்கள், லாரி, தனியார் பேருந்து, கார் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள், மகளிர் குழுக்கள், அரசு பணியாளர்கள், ஆலை தொழிலாளர் சங்கங்கள் என பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
 
போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், நாளை நடைபெறும் போராட்டத்தின்போது 3 மாவட்டங்களிலும் உள்ள சுமார் 2 லட்சம் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அடைக்கப்பட்டிருக்கும். 500க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியலும், தஞ்சை, பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகை, கீழ்வேளூர், மன்னார்குடி, திருவாரூர், நீடாமங்கலம் ஆகிய இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் நடைபெறும். தஞ்சையில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மயிலாடுதுறையில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் வணிகர் சங்க பேரவை மாநிலத் தலைவர் வெள்ளையன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
 
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரம் லாரிகளும் நாளை ஓடாது. அன்றைய தினம் லாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மன்னார்குடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என திருவாரூர் மாவட்ட லாரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதேபோல் தனியார் பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.