வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 23 ஏப்ரல் 2015 (12:12 IST)

உழவர்களின் கவலைகளை களைய ஆட்சியாளர்களுக்கு நேரமும், மனமும் இல்லை - ராமதாஸ் குற்றச்சாட்டு

உழவர்களின் கவலைகளை களைய ஆட்சியாளர்களுக்கு நேரமும், மனமும் இல்லாதது தான் உழவர்களை பெருமளவில் கொண்ட இந்தியாவின் சாபக்கேடு என்று பாமக  நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லியில் நேற்று நடத்திய உழவர்கள் பேரணியில் கலந்து கொண்ட ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தை சேர்ந்த கஜேந்திர சிங் என்ற விவசாயி போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகிலுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
 
காவல்துறையினர் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் நிகழ்ந்த இந்த தற்கொலை எனது இதயத்தை துளைத்து காயப்படுத்தி விட்டது. நாட்டிற்கே உணவு படைக்கும் உழவர்களின் வாழ்க்கையை உறுதி செய்ய முடியாதது இந்தியாவுக்கு பெரும் அவலமாகும். தற்கொலை செய்து கொண்ட உழவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கஜேந்திர சிங்கின் கதை மிகவும் சோகமானது. 3 குழந்தைகளின் தந்தையான அவர் தனது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். நடப்பு பருவத்தில் பயிர்கள் சேதமடைந்ததால் அவருக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
 
இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை அவரை வீட்டை விட்டு வெளியேற்றியதால் இந்த துயரமான முடிவை தேடிக்கொண்டிருக்கிறார். விவசாயத்தில் இழப்பும், அதனால் ஏற்பட்ட சோகமும் கஜேந்திரசிங்குக்கு மட்டும் சொந்தமானதல்ல. இந்தியாவிலுள்ள உழவர்கள் அனைவரிடமும் இதேபோன்ற சோகக்கதைகள் ஏராளமாக உள்ளன.
 
அவற்றை அறிந்து உழவர்களின் கவலைகளை களைய ஆட்சியாளர்களுக்கு நேரமும், மனமும் இல்லாதது தான் உழவர்களை பெருமளவில் கொண்ட இந்தியாவின் சாபக்கேடு. உத்தரப்பிரதேசம், பீகார், ஹரியானா, பஞ்சாப், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட 15 மாநிலங்களில் கடந்த மாதம் பெய்த எதிர்பாராத மழை மற்றும் ஆலங்கட்டி மழையால் 2.70 கோடி ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் சேதமடைந்தன.
 
இதனால் 50 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். உத்தரப்பிரதேசம் தான் மிக அதிக பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறது. அம்மாநிலத்தில் மட்டும் ரூ.1800 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவின் 15 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் இயற்கைச் சீற்றத்திற்கு தங்களின் பயிரையும், வாழ்க்கையையும் பறிகொடுத்து தவிக்கும் நிலையில் அவர்களுக்கு உதவி செய்ய எந்த அரசும் முன் வரவில்லை. மாறாக உதவி என்ற பெயரில் அவர்களை அசிங்கப்படுத்துகின்றன.
 
இயற்கைச் சீற்றத்தால் பயிர்களை இழந்த உழவர்களுக்கு உதவும் வகையில் பயிருக்கான இழப்பீடு 50% உயர்த்தி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த போதிலும், இன்றுவரை உழவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. மத்திய அரசு அறிவிக்கும் உதவியை விட இரு மடங்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்த உத்தரப்பிரதேச அரசு அதன்பின் செய்த செயல்தான் கொடுமையாகும். பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.63, ரூ.78, ரூ.100, ரூ.112 என காசோலைகளை வழங்கியிருக்கிறது அம்மாநில அரசு. இதனால் அம்மாநில விவசாயிகள் கொதித்து போயிருக்கிறார்கள்.
 
ஒருபுறம் பயிர் சேதம், இன்னொருபுறம் வாங்கிய கடனை திரும்பத்தர முடியாத நிலை, இதற்கெல்லாம் மேலாக வட்டிக்கு கடன் தந்தவர்களின் தொல்லை என அனைத்து புறமும் நெருக்கடிகள் முற்றியதால் கடந்த 4 வாரங்களில் மட்டும் வட மாநிலங்களில் 100 பேர் தற்கொலை செய்து கொண்டும், இழப்பை தாங்க முடியாத அதிர்ச்சியிலும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
 
இந்தியாவில் தாராளமயக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்தே உழவர்கள் தற்கொலை அதிகரித்து விட்டது. கடந்த 1995 ஆம் ஆண்டில் தொடங்கி கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் 2,96,438 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விதர்பா பகுதியை உள்ளடக்கிய மராட்டிய மாநிலத்தில் மட்டும் 60,750 பேர் தற்கொலை செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில் 623 உழவர்கள், 2012 ஆம் ஆண்டில் 499 பேர், 2013 ஆம் ஆண்டில் 105 பேர் என 3 ஆண்டுகளில் மொத்தம் 1227 பேர் உயிரை மாய்த்துள்ளனர். 2014 ஆம் ஆண்டை சேர்த்தால் இந்த எண்ணிக்கை 1500ஐ தாண்டும்.
 
உழவர்களின் தற்கொலைக்கான முக்கியக் காரணங்கள் வேளாண் இடுபொருட்களின் விலைகள் அதிகரித்தது, விளை பொருட்கள் விலை உயராதது, இயற்கை சீற்றத்தால் பயிர்கள் அழிவது, மரபணு மாற்றப்பட்ட விதை போன்றவையாகும். இவற்றை சரி செய்தால் தான் உழவர்களை காக்க முடியும்.
 
ஆனால், அதை செய்யாத மத்திய, மாநில அரசுகள் வெற்று வாக்குறுதிகளை மட்டுமே அளிக்கின்றன. வேளாண் விளை பொருட்களின் கொள்முதலை 3 சதவீதம் மட்டும் அதிகரித்து விட்டு, பயிர்க்கடன் வட்டியை 11 சதவீதம் ஆக உயர்த்தும் மத்திய அரசை உழவர்கள் நலன் காக்கும் அரசாக எப்படி கருத முடியும்? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.