வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 17 டிசம்பர் 2014 (18:35 IST)

1000 ரூபாய்க்கு துப்பாக்கி தயாரிக்கும் விவசாயி - அரசு அனுமதிக்காக காத்திருப்பு

அரியலூர் அருகே, 1000 ரூபாய்க்கு கைத்துப்பாக்கி தயாரிக்கும் விவசாயி ஒருவர் அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறார்.
 
அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த கண்டிராதித்தம் கிராமத்தை சேர்ந்த விவசாயி நரசிம்மன் (50). இவர் சொந்த முயற்சியில் துப்பாக்கி தயாரித்து வருவதாக திருமானூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
 
இதனை அடுத்து அங்கு சென்ற காவல் துறையினருக்கு துப்பாக்கி தயாரிக்கத் தடை விதித்தனர். மேலும் இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
இது குறித்து விவசாயி நரசிம்மன், ”நான் 9ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். கடந்த 20 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆராய்ச்சியில் 1 யூனிட் மின்சாரத்தை 3 மடங்காக்கும் நவீன கருவியை கடந்த 2007ஆம் ஆண்டு கண்டு பிடித்தேன்.
 
இந்த கண்டுபிடிப்புக்கான அங்கீகாரத்தை பெற 1998இல் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். ஆனால் எந்த பதிலும் இல்லை. இதையடுத்து, எனது கண்டுபிடிப்புக்கு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன்.
 
ஆனால் விஞ்ஞானத்தில் நாங்கள் தலையிட முடியாது என்று கூறி நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் அண்ணா பல்கலைகழகத்துக்கு எனது ஆய்வு முடிவுகளை எடுத்து சென்றேன். ஆனால், கல்வித் தகுதியை காரணம் காட்டி ஏற்க மறுத்துவிட்டனர்.
 
தற்போது நான் கண்டுபிடித்துள்ள கைதுப்பாக்கிக்கு அரசின் அனுமதி கேட்டு காத்திருக்கிறேன். 30 மீட்டரை இலக்காக கொண்டு சுடும் திறன் கொண்டது. இந்த துப்பாக்கி. இதை தயாரிக்க வெறும் ஆயிரம் ரூபாய் தான் செலவாகும்.

நான் தயாரித்துள்ள துப்பாக்கியின் செயல்முறையை விரைவில் இணையதளத்தில் வெளியிடுவேன்” என்று கூறியுள்ளார்.