வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 4 மார்ச் 2015 (15:10 IST)

தள்ளுபடி செய்த விவசாயக் கடனை வட்டியுடன் கேட்டு நோட்டீஸ்: நடவடிக்கை எடுக்க கருணாநிதி வலியுறுத்தல்

தி.மு.க. ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயக் கடனை 9 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்ப கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறித்து  நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று  தி.மு.க. தலைவர்  கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். 
 
கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
2006 ஆம் ஆண்டு மே திங்களில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற அதே மேடையில் நான் மூன்று அரசுக் கோப்புகளில் கையெழுத்திட்டேன். அதிலே ஒன்றுதான் விவசாயிகள் பெற்ற கூட்டுறவு கடன்கள் அறவே தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு ஆணையாகும்.
 
அவ்வாறே கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால், தமிழகத்தில் உள்ள 22 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயிகள் பயன் பெற்றனர். பயன் பெற்றதற்கான சான்றிதழ்களும் அந்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.
 
இந்நிலையில் தி.மு.க. அரசு தள்ளுபடி செய்த விவசாயக் கடனை, ஒன்பதாண்டுகள் கழித்து திடீரென்று இப்போது அசல் மற்றும் வட்டியுடன் திருப்பிச் செலுத்துமாறு தஞ்சை மாவட்டத்தில் உள்ள சில கூட்டுறவுக் கடன் சங்கங்கள் விவசாயிகளுக்கு தற்போது 'நோட்டீஸ்' அனுப்பி வருவதாகச் செய்திகள் வந்துள்ளன.
 
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமேயானால், தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியைச் சேர்ந்த முருகையன் என்பவரின் மனைவி சுசீலா என்பவர் நடுக்காவேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 9,110 ரூபாய் விவசாயக் கடன் பெற்றிருந்தார்.
 
தி.மு.க. அரசின் அறிவிப்புக்குப்பின், அசல் மற்றும் 1,880 ரூபாய் வட்டியும் சேர்த்து, 10,990 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ் கூட்டுறவு சங்கத்தினால் வழங்கப்பட்டது.
 
தற்போது ஒன்பதாண்டுகளுக்குப் பிறகு, கடந்த 18ஆம் தேதி சுசீலாவுக்கு, கூட்டுறவு சங்கத்திடமிருந்து வந்துள்ள நோட்டீசில், குறுகிய காலக்கடன் தொகை, வட்டியோடு சேர்த்து 30,857 ரூபாயை ஏழு நாட்களுக்குள் செலுத்த வேண்டுமென்றும் தவறினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் கூறப்பட்டுள்ளது.
 
சுசீலாவைப் போலவே மேலும் பல விவசாயிகளுக்கு இவ்வாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. இந்தச் செய்திகள் உண்மையானால், தமிழக அ.தி.மு.க. அரசு உடனடியாகத் தலையிட்டு, தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை மீண்டும் வசூலிக்க எடுக்கின்ற முயற்சி தவறானது என்பதைப் புரிந்து கொண்டு அதற்கான அறிவுரையை கூட்டுறவு கடன் வங்கிகளுக்கு அனுப்பிடுவார்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.