1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 28 நவம்பர் 2015 (15:21 IST)

தேமுதிக வினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

தேமுதிகவினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.


 

 
இது குறித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
தேமுதிக வின் மேற்கு சென்னை மாவட்ட கழக செயலாளர் ஏ.எம்.காமராஜ் சென்னை மாநகராட்சியின் ஆலந்தூர் உதவி ஆணையாளரை நேரில் சந்திக்க கைபேசி மூலம் முன் அனுமதி பெற்று தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கக் கோருவதற்காக ஆலந்தூர் மண்டல அலுவலகத்திற்கு சென்றார்.
 
அப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கட்ராமன் மற்றும் அவரோடு இருந்த அதிமுக வினர் பயங்கர ஆயுதங்களுடன் தேமுதிக வினரை கொடூரமான முறையில் தாக்க முற்பட்டனர்.
 
தங்களது பகுதியில் நிவாரணப் பணிகள் எதுவும் நடைபெறாததை அதிகார வர்க்கத்திற்கு முறையிட சென்றபோது இத்தகைய கொடூர தாக்குதல் நடத்துவதை எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது.
 
இதற்கு காவல்துறையும் ஒத்துழைப்பதை விட சட்டவிரோதச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.
 
எல்லாவற்றிற்கும் மேலாக தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் முறையிடச் சென்ற தேமுதிக செயலாளர் மற்றும் அவரது கட்சியினர் மீது பொய் வழக்கு தொடுத்திருப்பது மிகுந்த கண்டனத்திற்கு உரியது.
 
ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
 
தேமுதிக வினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதோடு, அவர்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கிற பொய் வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
 
சமீபகாலமாக அரசியல் கட்சிகள் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதில் கடும் கெடுபிடிகள் நிலவி வருகிறது. எதிர்கட்சிகள் வைக்கும் டிஜிட்டல் பேனர்கள் உடனடியாக அகற்றப்படுவதும், ஜெயலலிதாவின் படம் போட்ட பேனர்கள் தொடர்ந்து இருப்பதும் தொடர்கதையாக நடந்து வருகின்றன.
 
இத்தகைய பாரபட்சமற்ற நடவடிக்கைகளை காவல் துறையினரின் துணையோடு ஜெயலலிதா அரசு செய்து வருகிறது.
 
இத்தகைய நடவடிக்கைகளை முறியடிக்கிற வகையில் பல்வேறு உத்திகளை கையாள வேண்டிய பொறுப்பு ஜனநாயக சக்திகளுக்கு இருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் இளங்கோவன் கூறியுள்ளார்.