வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 26 பிப்ரவரி 2015 (11:08 IST)

‘பேஸ்புக்’ மூலம் பண மோசடி: சென்னையில் போலி டாக்டர் கைது

டாக்டர் என கூறி ‘பேஸ்புக்’ மூலம் பணம் மோசடி செய்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
 
சென்னை அடையாறு இந்திரா நகரை சேர்ந்தவர் பாலசுந்தரம். இவர், தங்கி இருந்த விடுதி அறையில் கோவை ராமர் கோவில் தெருவை சேர்ந்த சியாம்சுந்தர்(வயது 30) என்பவரும் தங்கி இருந்தார்.
 
அவர், பாலசுந்தரத்திடம் தான் சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருவதாக கூறினார். அதற்கான அடையாள அட்டையையும் அவரிடம் காண்பித்தார்.
 
இதை உண்மை என்று நம்பிய பாலசுந்தரம், தனக்கு நோய் உள்ளதாக அவரிடம் கூறினார். மேலும் அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டி ரூ.1 லட்சம் பணத்தை சியாம்சுந்தரிடம் கொடுத்ததாகவும் தெரிகிறது. ஆனால் சியாம்சுந்தர் சிகிச்சை அளிக்காமல் பணத்துடன் தலைமறைவாகி விட்டார்.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த பாலசுந்தரம், இதுபற்றி திருவான்மியூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து கோவையில் தலைமறைவாக இருந்த சியாம்சுந்தரை கைது செய்தார்.
 
விசாரணையில் அவர், போலி டாக்டர் என்பதும், அவரிடம் இருந்த அடையாள அட்டை போலியானது என்பதும் தெரிய வந்தது.
 
சியாம்சுந்தர் தனது ‘பேஸ்புக்’கில் தன்னை பிரபல மருத்துவமனையின் டாக்டர் என போட்டு உள்ளார். இதை பார்த்தவர்கள் அவரிடம் சிகிச்சைக்காக போனில் தொடர்பு கொண்டு உள்ளனர். அதற்கு சியாம்சுந்தர், தனது வங்கி கணக்கை கொடுத்து அதில் பணத்தை போட்டுவிட்டு தன்னை நேரில் பார்க்க வருமாறு ஒரு முகவரியை கூறுவார். பொதுமக்களும் அந்த வங்கி கணக்கில் பணத்தை போட்டு விட்டு அவர் கூறிய முகவரிக்கு சென்று பார்த்தால் அங்கு யாரும் இருக்க மாட்டார்கள்.
 
இவ்வாறு அவர் பலரிடம் இதுபோல் டாக்டர் என ஏமாற்றி பண மோசடி செய்து இருக்கலாம் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
 
அவரிடம் பிரபல மருத்துவமனையின் போலியான அடையாள அட்டையை போலீசார் கைப்பற்றினார்கள். கைதான சியாம்சுந்தரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.