வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 30 ஜூன் 2015 (20:54 IST)

எமர்ஜன்ஸி காலத்தில் தமிழகத்தில் நல்லதே நடந்தது - ஈ.வி.கே.எஸ்.

நெருக்கடிநிலை காலத்தில் தமிழ்நாட்டில் நல்லதே நடந்தது என, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
 
மதுரையில் செவ்வாய்க்கிழமை, காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் முகுல் வாஸ்னிக் உடன் இணைந்து இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட 4 பாஜக பெண் பிரமுகர்கள் மீது எழுந்துள்ள புகார்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மெüனம் சாதிப்பது சரியல்ல. புகாருக்கு உள்ளானோரைப் பதவியிலிருந்து விலகச் செய்ய வேண்டும். இல்லையெனில் பிரதமர் பதவி விலக வேண்டும். லலித் மோடியை பிரியங்காவும், அவரது கணவரும் சந்தித்தது திட்டமிட்டதல்ல. ஆகவே அதற்கு உள்நோக்கம் கற்பிப்பது சரியல்ல.
 
நெருக்கடிநிலை குறித்து அத்வானி கூறியது கவனிக்கத்தக்கது. ஆனால், காங்கிரஸால் நெருக்கடி நிலை கொண்டுவரப்பட்டபோது, தமிழகத்தில் மத்திய, மாநில அரசு அலுவலர்கள் சரியான நேரத்துக்குப் பணிக்கு வந்தனர். திமுக போன்ற கட்சிகள் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறினாலும், கடத்தல்காரர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆகவே, நெருக்கடிநிலை காலத்தில் தமிழகத்தில் நல்லதே நடந்தது என்றார்.