வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 3 ஜூலை 2015 (08:49 IST)

அடுக்கடுக்கான தவறுகள்; தமிழக அரசில் என்ன நடைபெறுகிறது?: கருணாநிதி ஆவேசம்

தமிழக அரசில் என்ன நடைபெறுகிறது? என்றும் தவறுகள், முறைகேடுகள் எல்லாம் கேட்பாரின்றி சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன என்றும் திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
சூரிய மின் உற்பத்தி நிலையம் ஒன்று 1,400 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க, தமிழக அரசுடன் குஜராத் அதானி குழுமம் ஒப்பந்தம் செய்து கொண்ட முக்கியமான பிரச்சினை குறித்து, நான் விடுத்த அறிக்கைக்கோ, டாக்டர் ராமதாஸ் விடுத்த அறிக்கைக்கோ தமிழக அரசின் சார்பிலோ, முதலமைச்சர் சார்பிலோ, மின்துறை அமைச்சர் சார்பிலோ ஏதாவது விளக்கம் கூறப்பட்டதா என்றால் இல்லவே இல்லை.
 
இதற்கிடையே பத்திரிகை ஒன்றில் அதானி குழுமத்திற்கும் முதலமைச்சருக்கும் இடையே ஒப்பந்தம் 30 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் கையெழுத்தாகலாம் என்றும் செய்தி வந்தது. இந்த அறிவிப்புக்கேற்ப, தலைமைச்செயலகத்தில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளும் நடைபெற்றுள்ளன. ஆனாலும் இந்த ஒப்பந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. ஏன் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது என்பதற்கான எந்த காரணமும் அதிமுக அரசு சார்பில் வெளியிடப்படவில்லை.
 
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக அதானி குழுமத்தைச் சேர்ந்த ராஜேஷ் அதானி, கரன் எஸ்.அதானி ஆகியோர் சென்னைக்கு வந்து காத்திருந்தும், நிகழ்ச்சி ரத்தானதை முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் அவர்களிடம் தெரிவிக்கவில்லையாம்.
 
அதிருப்தியும், ஏமாற்றமும் அடைந்த அதானி குழும நிர்வாகிகள் துறை அமைச்சரையும், அதிகாரிகளையும் பார்த்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார்களாம். 4 ஆம் தேதி அன்று இந்த நிகழ்ச்சியை வைத்துக் கொள்வதாக அவர்களிடம் கூறப்பட்டுள்ளதாம்.
 
உடன்குடி அனல் மின் நிலையம் குறித்து அதிமுக அரசு டெண்டர் கோரியது. அதில் சதர்ன் சென்ட்ரல் சீனா பவர் எனர்ஜி டிசைனிங் இன்ஸ்ட்டிடியூட் திரேசே கன்சார்டியம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தங்கள் நிறுவனம் குறைந்த தொகையைக் குறிப்பிட்டு ஒப்பந்தப்புள்ளியை தாக்கல் செய்த போதிலும், தங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும், டெண்டருக்கு தடை விதிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்ட போது, உயர் நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணா கடந்த மாதம் புதிய டெண்டர் விட இடைக்கால தடை விதித்தார்.
 
வழக்கு முடியும் வரை புதிய டெண்டர் விடக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் உடன்குடி அனல் மின் நிலையம் அமைக்க இரண்டாவது முறையாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
 
இதற்கும் தடை விதிக்க வேண்டுமென்று சீன நிறுவனம் மீண்டும் ஒரு மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அந்த மனுவில் நீதிபதி சத்யநாராயணா "இந்த மனு மீதான தீர்ப்பு தள்ளி வைக்கப்படுகிறது. தீர்ப்பு பிறப்பிக்கும் வரை புதிய ஒப்பந்தப்புள்ளியை திறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டிருக்கிறார்.
 
ஜெயலலிதா இஸ்லாமிய பெருமக்களுக்கு இப்தார் விருந்து அளிக்கப்போவதாக அனைத்து ஏடுகளிலும் செய்தி வெளியிட்டிருந்தார்கள். அதற்காக வழியெங்கும் ஆடம்பர அலங்கார வரவேற்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
 
ஜெயலலிதாவே அழைப்பு விடுத்திருந்ததால், இஸ்லாமியப் பெருமக்களும், தோழமைக் கட்சியினரும் கூட விருந்துக்கு வருகை தந்தார்கள். ஆனால் அவர்களையெல்லாம் யார் விருந்துக்கு அழைத்தார்களோ, அந்த ஜெயலலிதா நோன்பு துறக்கும் நிகழ்ச்சிக்கே வரவில்லை.
 
உடல் நலக்குறைவு காரணமாக அவர் விருந்துக்கு வரவில்லை என்று கடைசி நேரத்தில் கூறப்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு உடல் நலக்குறைவு என்றால் அலட்சியப்படுத்தப்படக்கூடியதா? அது பற்றிய விவரம் என்ன என்று முறைப்படி அரசு அறிவிக்க வேண்டாமா? பொதுமக்கள் அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள் அல்லவா?
 
ஆனால் ஜெயலலிதா இப்தார் நிகழ்ச்சிக்கு வராமல் இருந்த அதே நாளில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த 40 மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசுத்தொகையும், சான்றிதழும் வழங்கியதாக ஒரு செய்தி வந்துள்ளது.
 
அதிலே கூட ஒரு சிலருக்கு மட்டும் அவைகளை வழங்கி விட்டு 958 மாணவர்கள் முதல் மூன்று இடங்களை பெற்ற போதும் பரிசுத்தொகையும், சான்றிதழும் முதலமைச்சர் கையால் வழங்கப்படவில்லையாம்.
 
கடந்த ஆண்டும் இது போலவே தான் அந்த மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். இந்த ஆண்டும் கூட கடந்த 25 ஆம் தேதியன்று இவைகளை வழங்கப்போவதாக அந்த மாணவர்கள் அழைக்கப்பட்டு, அன்று வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டார்களாம்.
 
இப்படி அடுக்கடுக்கான தவறுகளும், யாரும் எதிர்பாராத நிகழ்வுகளும் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறுவதைக் காணும்போது, தமிழக அரசில் என்ன நடைபெறுகிறது, எப்படிப்பட்ட தவறுகள், முறைகேடுகள் எல்லாம் கேட்பாரின்றி சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன என்பதை யாரும் எளிதில் புரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.