1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 25 ஜூலை 2014 (07:43 IST)

கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் ஆகியோருக்கு, நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

கொடுமுடி அருகே உள்ள ஏமாகண்டனூரைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் 34 வயதுடைய சசிகுமார். இவர்  கொடுமுடியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் வேலை செய்து வந்தார்.

இவரும் இதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள் வனிதாவும் கடந்த 2000 மாவது ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் வனிதாவுக்கும் இதே பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய செந்தில்குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. செந்தில்குமார், வனிதாவின் கள்ளக்காதலை அறிந்த சசிகுமார் இருவரையும் கண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரம் அடைந்த இருவரும் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி இரவு, சசிகுமாரை சேலையால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.

பின்னர் அவரது உடலை கொடுமுடி சுடுகாட்டில் எரித்துள்ளனர்.

இது தொடர்பாக சசிகுமாரின் தாயார் பாப்பாத்தி காவல் துறையினரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் வனிதா, செந்தில்குமார், வனிதாவின் தந்தை முருகேசன், உள்பட 5 பேர் மீது கொடு முடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வனிதா, அவரது கள்ளக்காதலன் செந்தில்குமார் ஆகியோருக்கு ஆயுள்தண்டனையும், தடயத்தை மறைத்ததற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து, தந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என  உத்தரவிட்டார்.

மேலும் வனிதாவின் தந்தை முருகேசனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தார்.