வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 2 அக்டோபர் 2015 (14:39 IST)

குதிரை குப்புறத் தள்ளியதும் இல்லாமல் குழியும் பறித்துவிட்டது: கருணாநிதி கருத்து

ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை தொடர்பாக ஐ.நா கொண்டுவந்துள்ள தீர்மானம் குறித்தும் மத்திய அரசின் நிலை குறித்தும் கருத்து கூறியுள்ள, திமுக தலைவர் கருணாநிதி குதிரை குப்புறத் தள்ளியதும் இல்லாமல் குழியும் பறித்துவிட்டது என்று கூறியுள்ளார்.

இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
"தாமதப்படுத்தப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி ஆகும்" என்று இலக்கணம் வகுக்கப்பட்டிருந்தாலும்; இலங்கையின் ஆதிக்குடி மக்களான ஈழத்தமிழர்களுக்குத் தொடர்ந்து இழைக்கப்பட்டு வந்த எண்ணிலடங்காத கொடுமைகளுக்கும், இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றுக்கும் தாமதமாகவேனும் நீதியும் நியாயமும் கிடைக்குமென்று உலகத்தமிழர்கள் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், அதிர்ச்சி தரும் விதமாக அமைந்திருக்கிறது ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம்.
 
அமெரிக்கா தொடக்கத்தில் கொண்டு வந்த தீர்மானத்தில் இருந்த "சர்வதேச" என்ற சொல் இந்தத் தீர்மானத்தில் நீக்கப்பட்டுள்ளது. உலகத்தின் பல்வேறு விசாரணை அமைப்புகளாலும் இதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்ட இனப்படுகொலை பற்றி இந்தத் தீர்மானத்தில் எதுவும் இடம் பெறவில்லை.
 
மேலும் அந்தத் தீர்மானத்தில் இந்த விசாரணையை "இலங்கை" அரசே நடத்த வேண்டுமென்று குறிப்பிட்டிருப்பது, குற்றம் சாட்டப்பட்டவரிடமே குற்ற விசாரணை அதிகாரத்தை ஒப்படைப்பதற்குச் சமமாகும்.
 
நீதி விசாரணையை காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளைக் கொண்டு நடத்தினாலும், அவர்கள் இலங்கை அரசின் நேரடிப் பார்வையில் இலங்கையிலே இருந்து கொண்டு விசாரணை நடத்தினால், அதன் முடிவு எப்படியிருக்கக் கூடும் என்று சந்தேகிக்க இடம் வருமல்லவா? மேலும் காமன்வெல்த் அமைப்பின் தலைமைப் பீடத்தில் தற்போது இலங்கை தான் இருந்து வருகிறது என்பதையும் ஒதுக்கி விட முடியாது.
 
கொடுமையிலும் கொடுமையாக, அந்தப் போர்க் குற்றங்களைச் செய்த சிங்களப் பேரினவாத இலங்கைக்கு ஆதரவாக நம்முடைய இந்தியாவும் மவுனம் சாதித்துள்ளது. நாடற்றவர்கள் நாதியற்றவர்களாகி விட்ட நிலை தான் இன்று தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
 
இலங்கை என்ற நாட்டுக்கு ஆதரவாகத்தான் அமெரிக்காவும் இருக்கிறது, இங்கிலாந்தும் இருக்கிறது, சீனாவும் இருக்கிறது, அந்த நாடுகளோடு இந்தியாவும் இருக்கிறது. இந்திய அரசும் பெரும் பாதிப்புக்காளான தமிழர்களுக்கு நீதி கிடைத்திட வேண்டுமென்ற உள்ளார்ந்த எண்ணத்தோடு, சுதந்திரமான, நம்பகத்தன்மையுள்ள சர்வதேச விசாரணை வேண்டும் என்பதற்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டுமென்றும், இந்தியாவே அதற்கானதொரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் முன் மொழிய வேண்டுமென்றும் தொடர்ந்து திமுக வும், "டெசோ" அமைப்பும் தெரிவித்து வந்தன.
 
தமிழக அரசின் சார்பிலே கூட கடந்த 16.9.2015 அன்று சட்டப்பேரவையில் கொண்டு வந்த தீர்மானத்தில் "போர் விதிகளை முற்றிலும் மீறி போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை நிகழ்த்தியவர்கள் அனைவர் மீதும் சர்வதேச விசாரணை நடத்தும் வகையிலான வலுவான தீர்மானத்தினை இந்தியாவே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு முன்பு அமெரிக்கா உட்பட மற்ற நாடுகளுடன் இணைந்து கொண்டு வர வேண்டும். அமெரிக்கா, இலங்கைக்கு ஆதரவான நிலையை எடுத்தால், அதனை மாற்ற ராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டது.
 
ஆனால் "குதிரை குப்புறத் தள்ளியதும் இல்லாமல் குழியும் பறித்துவிட்டது" என்பதைப் போல மத்திய அரசு தனியே தீர்மானமும் கொண்டு வரவில்லை; மாறாக இலங்கையும், அமெரிக்காவும் இணைந்து கொண்டு வந்த தீர்மானத்தையும் ஆதரித்து விட்டது.
 
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், உலகத் தமிழ் அமைப்புகளின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக நிறைவேற்றப்பட்டுள்ள நீர்த்துப் போன தீர்மானத்தை யாவது இலங்கை அரசு முழு மனதோடு நேர்மையான முறையிலே நிறைவேற்றுமா என்பது பெரும் ஐயப்பாட்டுக்கு உரியது தான்.
 
கடந்த காலங்களில் தமிழர்களோடு சிங்களத் தலைவர்கள் செய்து கொண்ட 14 ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படவே இல்லை என்பதோடு அவற்றுக்கு மாறான நிகழ்வுகளே இலங்கையில் சிங்களவர்களால் நடத்தப்பட்டன என்பதையும்; தற்போது இலங்கை அதிபராக இருக்கும் மைத்திரி பால சிறிசேனா அவர்கள் தனது தேர்தலுக்கு முன்பு சர்வதேச விசாரணை வேண்டுமென்று வாக்குறுதி அளித்தவர் என்பதையும்; தற்போது நான்காவது முறையாக இலங்கைப் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் ரனில் விக்ரமசிங்கே, 2002 ஆம் ஆண்டு இலங்கைப் பிரதமராக இருந்த போது, நார்வே நாட்டு ஆஸ்லோ நகரில், விடுதலைப் புலிகள் உடனான பேச்சுவார்த்தை முடிவில், ஒன்றுபட்ட இலங்கை நாட்டில் சிங்களர்களுக்கு என்று ஒரு மாநிலமும், தமிழர்களுக்கு என்று மற்றொரு மாநிலமும் ஆக இரண்டு மாநிலங்கள் உருவாக்கப்படுவதற்கு ஒப்புதல் அளித்தவர் என்பதையும்; உலகத் தமிழர்கள் ஒரு போதும் மறந்து விட மாட்டார்கள்.
 
இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் நிறையேறியுள்ள தீர்மானம் தமிழர்களுக்கு முழுமையான அளவுக்கு நிறைவையோ, நம்பிக்கையையோ தரக்கூடிய ஒன்றல்ல. ஆனால் இது பற்றி அக்கறையோடு ஆதரவாக இருந்திருக்க வேண்டிய இந்திய மத்திய அரசும் தமிழர்களுக்கு உகந்த நிலை எடுக்கவில்லை என்பதையும், தமிழக அரசின் தீர்மானத்தை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்பதையும் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
 
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், ஈழத்தமிழர்கள் பட்டுள்ள ஆழமான காயங்களுக்கு உரிய மருந்தாகாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.