வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 26 நவம்பர் 2015 (01:40 IST)

என்னை நீக்க இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை: புயலாக மாறிய வசந்த குமார்

காங்கிரஸ் கட்சியின் மாநில வர்த்தகப் பிரிவுத் தலைவர் பதவியிலிருந்து என்னை நீக்க, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை என எச்.வசந்த குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் எச்.வசந்த குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தமிழ்நாடு காங்கிரஸ் வர்த்தகப் பிரிவுத் தலைவர் பொறுப்பிலிருந்து என்னை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நீக்கியதாக கூறப்படும் தகவலை ஊடகங்களின் மூலமே தெரிய வந்தது. இதற்கான காரணம் எதையும் அவர் கூறவில்லை.
 
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் வர்த்தகப் பிரிவுத் தலைவராக 1998 ஆம் ஆண்டு முதல் என்னை நியமித்தது. அன்று முதல் இன்று வரை இந்தப் பொறுப்பில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறேன்.
 
தமிழ்நாடு காங்கிரஸ் வர்த்தகப் பிரிவுத் தலைவராக என்னை நியமனம் செய்தது,  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி. எனவே, என்னை அந்த பதவியில் இருந்து நீக்கவோ அல்லது பதவியில் தொடர்வதாக அறிவிக்கவோ, ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை என்றார். மேலும், பழிவாங்கும் நோக்கத்தோடு அவர் செயல்படுகிறார் என குற்றம் சாட்டினார்.