1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 26 நவம்பர் 2014 (18:34 IST)

மாவீரர் தினத்துக்கு ப்ளெக்ஸ் வைத்த தி.வி.க. தொண்டர் மீது போலீஸ் கொலைவெறித் தாக்குதல்

மாவீரர் தினத்துக்கு பதாகைகள் வைத்த திராவிடர் விடுதலைக் கழகத் தொண்டர் மீது சென்னை மயிலாப்பூர் காவல்துறையினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அவர் மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நவம்பர் 27 - தமீழீழ விடுதலைப் போராட்டத்துக்காக உயிர் நீத்த மாவீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் அமைதியான முறையில் மெழுகுவர்த்திகளை ஏந்தி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு உலகம் முழுவதும் தமிழீழ விடுதலையை ஆதரிப்போர் அனுசரிப்பது வழக்கம். அதேபோல் தமிழகத்திலும், தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் அமைப்புகள் இந்த நாளை நினைவுகூறுகின்றனர்.
 
சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக மாவீரர் தினம் ராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில் அனுசரிப்பதாக மயிலாப்பூரில் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது. இன்று (26-11-14) மயிலாப்பூர் அபிராமபுரம் காவல்துறையினர் அந்தப் பதாகைகளை அகற்றியுள்ளனர். அதை அந்தப் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் தடுக்க முற்பட்டுள்ளனர். அப்போது அங்கு இருந்த ஒரு பெண்ணை ஆண் காவலர் ஒரு கீழே தள்ளி தாக்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த தி.வி.க. தொண்டர் மயிலை உமாபதிக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே காவல்துறையினர் உமாபதியை அபிராமபுரம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த உமாபதி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
தகவல் அறிந்து அப்பகுதியில் கூடிய பொதுமக்களும், தி.வி.க.வினரும் சாலைமறியலில் ஈடுபட்டனர். உமாபதி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அபிராமபுரம் காவல்நிலையத்தைச் சேர்ந்த எஸ்.ஐ. இளையராஜா, எஸ்.ஐ. கலைச்செல்வி மற்றும் காவலர் வடிவேலு ஆகியோரைக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.