வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 29 மே 2015 (22:32 IST)

சென்னையில் எந்த நேரமும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம் - எச்சரிக்கை மணியடிக்கும் அன்புமணி

சென்னையில் எந்த நேரமும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம் என்பதை உணர்ந்து அதைச் சமாளிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி  கூறியுள்ளார்.
 
இது குறித்து பாமக இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
சென்னை புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் டிராக்டர்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு ஒரு குடம் ரூ.5 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
 
சென்னையில் எந்த நேரமும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம் என்பதை உணர்ந்து அதைச் சமாளிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை குடிநீர் வாரியமும், அதற்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வேலுமணியும் எடுத்திருக்க வேண்டும்.
 
சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூண்டி ஏரி, புழல் ஏரி, சோழவரம் ஏரி, செம்பரப்பாக்கம் ஏரி ஆகிய 4 நீர்த்தேக்கங்கள் தான் நிறைவேற்றி வருகின்றன. இவற்றின் மொத்தக் கொள்ளளவு 11.057 டி.எம்.சி. ஆகும். ஆனால், இப்போது இவற்றில் வெறும் 1.743 டி.எம்.சி. அளவுக்கு மட்டுமே  தண்ணீர் உள்ளது.
 
இது மொத்த கொள்ளளவில் 15 சதவீதம் மட்டுமே. இப்போதுள்ள தண்ணீரைக் கொண்டு இன்னும் 10 நாள்களுக்குக் கூட குழாய்கள் மூலம் குடிநீர் வழங்க முடியாது.எனவே, குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க அவசரகால நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.
 
சென்னையில் நிலவும் குடிநீர் பஞ்சத்தின் தீவிரத்தை உணர்ந்து ஆந்திர அரசிடம் பேசி, நடப்பாண்டில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 12 டி.எம்.சி. கிருஷ்ணா நீரில் இதுவரை வழங்கப்பட்டது போக மீதமுள்ள தண்ணீரைப் பெற்று, குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.