வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: திங்கள், 23 மார்ச் 2015 (07:53 IST)

குடிநீர் பிரச்சினையைப் போக்க ரூ.95 கோடி நிதி : தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தின் குடிநீர் பிரச்சினையை போக்க ரூ.95 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை காலத்தில் வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், காஞ்சீபுரம், திருச்சி, விருதுநகர், மதுரை, பெரம்பலூர் ஆகிய 8 மாவட்டங்களில் போதிய அளவு மழை பெய்யவில்லை.
 
இதனால், அந்த மாவட்டங்களில் சில இடங்களில் குடிநீர் பற்றாக்குறை உள்ளதால் தமிழக அரசிடம் மாவட்ட ஆட்சியர்கள் நிதி கேட்டிருந்தனர்.
 
இதைத் தொடர்ந்து, இனி வரும் கோடையில் குடிநீர் தேவையை சமாளிக்க நடவடிக்கை எடுப்பது குறித்து தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
 
அந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில், சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு மொத்தம் ரூ.95 கோடியே 50 லட்சம் நிதியை அரசு ஒதுக்கி ஆணையிட்டுள்ளது.
 
மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விவரம்:-
 
வேலூர் - ரூ.20 கோடி,  திருவண்ணாமலை - ரூ.10 கோடி, காஞ்சீபுரம் - ரூ.5 கோடி, திருச்சி - ரூ.5 கோடி, விருதுநகர் - ரூ.5 கோடி, மதுரை - ரூ.5 கோடி, பெரம்பலூர் - ரூ.3 கோடி, அரியலூர் - ரூ.2 கோடி. மேலும், இந்த மாவட்டங்கள் தவிர 23 மாவட்டங்களுக்கு தலா ரூ.50 லட்சம் வீதம் ரூ.11 கோடியே 50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
 
இந்நிலையில், சென்னை நகரின் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க சென்னை பெருநகர் குடிநீர் வாரியத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்படும் குடிநீர் திட்ட பணிகளுக்கு ரூ.10 கோடியும், தமிழ்நாடு குடிநீர் வாரியத்திற்கு ரூ.5 கோடியும், நகர பஞ்சாயத்துக்களுக்கு ரூ.3 கோடியும், கால்நடை பராமரிப்பு துறை மூலம் குடிநீர் வழங்க ரூ.1 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
இதன்படி, மொத்தம் ரூ.95 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.