செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 24 டிசம்பர் 2016 (19:03 IST)

சென்னையில் உள்ள மரங்களை அகற்றுங்கள்.. இல்லையெனில்? : எச்சரிக்கும் ராமதாஸ்

வர்தா புயல் காரணமாக தெருக்களில் வீழ்ந்து கிடக்கும் மரங்களை அகற்றுங்கள். இல்லையெனில் அவை தீ பற்ற வாய்ப்பிருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
சென்னையை தாக்கிய வர்தா புயலால் சொல்ல முடியாத அளவுக்கு பாதிப்புகளும், சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இந்த பாதிப்புகளில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் முழுமையாக மீளூம் முன்பே மாநகராட்சியின் அலட்சியத்தால் இன்னும் ஒரு பேரழிவை சந்திக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
 
வர்தா புயல் தாக்கி 12 நாட்கள் ஆகி விட்ட நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. சென்னையில் சில இடங்களிலும், புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும் இன்னும் மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை. மின்சாரம் வழங்கப்பட்ட பகுதிகளில் இன்னும் மின் வினியோகம் சீரடையவில்லை. இரண்டு மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டால், ஒரு மணி நேரம் மின்தடை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
சென்னை மாநகரிலும், புறநகர் பகுதிகளிலும் வர்தா புயலால் சிறியதும், பெரியதுமாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்தன. அவற்றில் பெரும்பான்மையான மரங்கள் இன்னும் அகற்றப் படவில்லை. சென்னையில் போக்குவரத்துச் சாலைகளில் சாய்ந்த மரங்கள் மட்டும் தான் முழுமையாக வெட்டி அகற்றப்பட்டுள்ளன. உட்புறச் சாலைகளில் சாய்ந்து விழுந்த மரங்களின் ஒரு பகுதி மட்டுமே, போக்குவரத்துக்கு வழி விடும் வகையில் வெட்டி அகற்றப்பட்டிருக்கின்றன. சாய்ந்த மரங்களின் மீதமுள்ள பகுதிகள் அகற்றப்படாமல் அப்படியே சாலையின் இருபுறமும் நீட்டிக் கொண்டிருக்கின்றன. இதனால் உட்புற சாலைகளின் அகலம் குறைந்து விட்டது. இதுவும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
 
இதைவிட மோசமான விஷயம் என்னவென்றால் சாலைகளில் இருந்து அகற்றப்பட்ட மரங்கள் அனைத்தும் கிடங்குகளுக்கு கொண்டு சென்று பாதுகாப்பான முறையில் வைக்கப்படுவதற்கு பதிலாக ஆங்காங்கே உள்ள விளையாட்டுத் திடல்களிலும், மாநகராட்சியின் மண்டல, கோட்ட மற்றும் வட்ட அலுவலகங்களிலும் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுக்கு எந்த விதமான கணக்குகளோ. பாதுகாப்போ இல்லை. வெட்டப்பட்ட மரங்கள் அனைத்தும் கண்ட இடங்களில் போடப்பட்டிருக்கின்றன. இதனால் விளையாட்டுத் திடல்கள், மாநகராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றின் பயன்பாடு பாதிக்கப்பட்டு உள்ளன. இவற்றுக்கெல்லாம் மேலாக குவிக்கப்பட்டுள்ள மரங்களால் தீவிபத்து ஏற்படும் ஆபத்துள்ளது.
 
சென்னையில் சாய்ந்த மரங்களில் ஒரு சதவீதம் கூட நாட்டு மரங்கள் இல்லை. கிட்டத்தட்ட சாய்ந்த மரங்கள் அனைத்துமே நிழல் தருவதற்காக வளர்க்கப்பட்ட வெளிநாட்டு மரங்கள் தான். அயல்வாகை (தூங்குமூஞ்சி ), மஞ்சள் கொன்றை (குல்மொஹர்), மயில் கொன்றை ஆகிய மரங்களே பெரும்பாலும் விழுந்துள்ளன. தென் அமெரிக்காவில் தோன்றிய இவ்வகை மரங்களை சாலையோரங்களில் நிழலை ஏற்படுத்தும் நோக்குடன் ஆங்கிலேயர்கள் வளர்த்தனர்.

அதன்பின்னர் நமது ஆட்சியாளர்களும் இவ்வகை மரங்களை வளர்த்ததால் தான் இவை எளிதில் வீழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த உறுதியானவை அல்ல. பஞ்சு போன்றவை. இந்த மரங்களுடன் அவற்றின் இலைச்சருகுகளும் சேர்த்துக் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. பாதுகாப்பில்லாமல் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மரங்கள் மற்றும் சருகுகள் மீது சிறு தீப்பொறி பட்டால் கூட, அவை எரிந்து மிகப்பெரிய தீ விபத்து ஏற்படக்கூடும்.
 
இதைக் கருத்தில் கொண்டு விளையாட்டுத் திடல்கள், மண்டல அலுவலகங்கள் போன்ற இடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மரங்களில் பயனுள்ளவற்றை கிடங்குகளுக்கு கொண்டு சென்று பாதுகாத்து வைக்க வேண்டும். பயன்பாடற்ற விறகுக்கு மட்டுமே பயன்படக்கூடிய மரங்களை ஏலம் விட வேண்டும். இதன் மூலம் விபத்துக்கள் தவிர்க்கப்படுவதுடன், விளையாட்டுத் திடல்களும், மண்டல அலுவலகங்களும் அவற்றின் உண்மையான பயன்பாட்டுக்கு கிடைக்கும். எனவே, போர்க்கால அடிப்படையில் 2 நாட்களில் மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசும், மாநகராட்சியும் மேற்கொள்ள வேண்டும்.
 
வர்தா புயலால் சென்னையில் உள்ள பூங்காக்களும் சீரழிந்து விட்டன. அவற்றில் சாய்ந்த மரங்களையும் அப்புறப்படுத்தி, அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மரங்களை அகற்றும் பணிகள் முடிந்தவுடன், பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடும் பணி தொடங்கும்; அதற்காக மரக்கன்றுகளை வளர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
 
என அவர் குறிப்பிட்டுள்ளார்.