1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 14 நவம்பர் 2015 (13:16 IST)

டெங்கு காய்ச்சல் குறித்து பீதி வேண்டாம் - சுகாதாரத் துறை செயலாளர்

டெங்கு காய்ச்சலை முதலிலேயே கண்டறிந்தால் அதை முற்றிலும் குணப்படுத்தலாம். நோய் வரும் முன்பே விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து அவர் கூறுகையில், ”வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தொடங்கி பெய்து வருகிறது. மழைக்காலம் காரணமாக சில வகை காய்ச்சல் மக்களை தொற்றிக் கொள்ளலாம். எனவே தமிழக அரசு அனைத்து வகையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 
தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு காய்ச்சல் வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. எந்த காய்ச்சல் என்றாலும் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்லுங்கள். அங்கு சென்றதும் ரத்த பரிசோதனை செய்யப்படும். அதற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
 
அரசு மருத்துவமனைகளில் எல்லாவித காய்ச்சலுக்கும் மருந்துகள் உள்ளன. டெங்கு காய்ச்சல் என்றாலும் அனைத்து மருத்துவமனைகளிலும் அந்த நோயை குணப்படுத்தும் மருந்துகள் உள்ளன.
 
நோயாளிகளுக்கு ரத்தத்தில் உள்ள அணுக்கள் குறைந்தால் அதை நிவர்த்தி செய்ய முடியும். போதுமான மருத்துவ வசதிகள் அரசு மருத்துவமனைகளில் உள்ளன. தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது. டெங்கு காய்ச்சலை முதலிலேயே கண்டறிந்தால் அதை முற்றிலும் குணப்படுத்தலாம்.
 
நான் சொல்வது நோய் வரும் முன்பே விழிப்புணர்வாக இருக்க வேண்டும். டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய கொசு நல்ல தண்ணீரில் வளரக்கூடியது. எனவே வீடுகளிலும், கட்டிடம் கட்டும் இடங்களிலும் அல்லது எந்த இடமாக இருந்தாலும் மழை நீர் தேங்கி கிடக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது” என்று தெரிவித்துள்ளார்.