வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Modified: வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (16:32 IST)

ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி - நாட்டு இன மாடுகளுக்கு திடீர் மவுசு

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு, தமிழகத்தில் மீண்டும், காங்கேயம் இனம் உள்ளிட்ட நாட்டு மாடுகளுக்கு செம மவுசு ஏற்பட்டுள்ளது. இதனால், காங்கேயம் இன மாடுகளை விலைக்கு வாங்க பலர், போட்டி போடுகின்றனர்.


 

தமிழகத்தில் கரூர், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில், கடின உழைப்புக்கு பெயர் போன காங் கேயம் இன மாடுகள் வளர்க்கப்பட்டது.இத்தகைய மாடுகள் தொடர்ந்து, 12 மணி நேரம் உழவு, பாரம் வண்டி இழுத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டது. மேலும், காங்கேயம் இன மாடுகளில் பால் ஏ–2 ரகத்தை சேர்ந்தது. இதில், உடலுக்கு தேவையான கொழுப்பு சத்து இருப்பதால், சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பில்லை. மருத்துவ குணம் உண்டு. இத்தகைய மாடுகள் வறட்சி காலத்தில். வெறும் பனை ஓலைகளை தின்று உயிர் வாழும். மேலும், காங்கேய மாடுகளின் கழிவுகள் விவசாயத்துக்கு பயன்படுத்தப் பட்டது.

மாடுகளின் வண்ணங்களை கொண்டு, மூன்று வகையாக பிரிக்கலாம். இதில், 95 சதவீதம் மயிலை எனப்படும் வெள்ளை நிறம் கொண்டவை, மூன்று சதவீதம் செவலை எனப்படும் சிவப்பு நிறம் கொண்டவை. இரண்டு சதவீதம் காரி எனப்படும் கருப்பு நிறம் கொண்டவை.
கடந்த, 1990 ம் ஆண்டுகளில், 11 லட்சத்து, 76 ஆயிரம் மாடுகள் இருந்தது. 2000 ம் ஆண்டில், நான்கு லட்சத்து, 40 ஆயிரமாக குறைந்து தற்போது, இரண்டரை லட்சமாக உள்ளது.
காங்கேய இன மாடுகள் ஒரு வேளைக்கு, மூன்று முதல், நான்கு லிட்டர் பால் கறக்கும். இதனால், வியாபார ரீதியாக இத்தகைய மாடுகளை வளர்க்க விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.

பால் வர்த்தகத்துக்காக கலப்பின மாடுகளை அதிகம் வளர்க்க துவங்கியதால், காங்கேயம் இனம் உள்பட நாட்டு மாடுகளின் இனப் பெருக்கம் குறைந்தது. மேலும் கடந்த, மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக் கட்டு போட்டி, ரேக்ளா போட்டிக்கு தடை இருந்ததால், நாட்டு மாடுகளை யாரும் வாங்க முன் வரவில்லை.

இந்நிலையில், மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால், ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் மீண்டும் நடக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், காங் கேயம் இன மாடுகள் உள்ளிட்ட, நாட்டு மாடுகளுக்கு செம மவுசு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரவக்குறிச்சி புளியம்பட்டி பகுதியை சேர்ந்த நல்லசிவம் கூறுகையில், ‘‘ கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் கிராமப் பகுதியில் பசுமாடுகளுக்கு சினை பிடிக்க காளைகளை பயன்படுத்தினர். ஆனால், தற்போது ஊசி மூலம் மாடுகளுக்கு சினை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படு கிறது. இதனால், நாட்டு மாடுகளின் இனப் பெருக்கம் குறைந்தது. மேலும், ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிக்கு தடை இருந்ததால், வியாபார ரீதியாக பாலுக்காக, கலப்பின மாடுகளை விவசாயி கள் வாங்கினர்.

தற்போது நடந்த ஜல்லிக்கட்டு போராட்ட த்தால், காங்கேயம் உள்ளிட்ட நாட்டு இன மாடுகளுக்கு கிராக்கி கூடியுள்ளது. ஒரு நாட்டு மாட்டின் கன்றுகுட்டி, ஒரு லட்ச ரூபாய் வரை தற்போது விலை போகிறது’’ என்றார்.

கரூர் செல்லாண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த கல்லுாரி பேராசிரியர் ராகுல் கூறுகையில், ‘‘ ஜல்லிக்கட்டு போராட்டத் தின் போது, மாணவர்கள், இளைஞர்கள் கலப்பின மாடுகளின் பால் குடித்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து, சமூக வலை தளங்கள் மூலம் பரப்பினர்.
 
சமீப காலமாக இளம் வயதினரையும் தாக்கி யுள்ள சர்க்கரை நோய், கலப்பின மாடுகளின் பால் குடிப்பதால் வருவதாக தெரியவந்துள்ளது. இதனால், பொதுமக்களிடம் நாட்டு மாடுகள் பற்றிய, விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டு மாடுகளின் இனப்பெருக்கம் அதிகரிக்க வாய்ப்புண்டு’’ என்றார்.

கரூரை சேர்ந்த ரமேஷ் கூறுகையில், ‘‘ ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டி மற்றும் உழவு பணிகளில் ஈடுப்படுத்தப்படும் நாட்டு இன காளை மாடுகள்தான், இனப்பெருக்கத் துக்கும் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இனப்பெருக்கத்துக்கு, ஊசியை பயன்படுத்தி யதால், கலப்பின மாடுகள் அதிகரித்தது. ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகள் தொடர்ந்து நடந்தால், நாட்டு இன மாடுகள் இனப்பெருக்கம் அதிகரிக்கும்’’ என்றார்.

இது மட்டுமில்லாமல் நாட்டு மாடுகளின் பால்களை போட்டி போட்டு வியாபாரிகளும், பொதுமக்களும் வாங்கி வரும் நிலையில் எப்படியோ ஒட்டு மொத்த தமிழர்களையும், ஒருங்கிணைத்து ஒரு ஜல்லிக்கட்டு போராட்டத்தினால் அடிமாடு (கறிகூடாரங்களுக்கு) செல்லும் நாட்டு மாடுகள் குறைந்து தற்போது தமிழக அளவில் நாட்டு மாடுகள் பேணிக்காக்க படுகின்றன.


கரூரிலிருந்து சிறப்பு செய்தியாளர்
சி.ஆனந்தகுமார்