வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (19:02 IST)

செல்போனை சார்ஜ் போட்டுக் கொண்டே யாரும் பேச வேண்டாம் - ஸ்டாலின் வேண்டுகோள்

செல்போனை சார்ஜ் போட்டுக் கொண்டே யாரும் பேச வேண்டாம் - ஸ்டாலின் வேண்டுகோள்

செல்போனை சார்ஜில் போட்டுக் கொண்டே இனி யாரும் தயவு செய்து பேச வேண்டாம் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

 
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த செய்யூரை சேர்ந்தவர் எட்டியப்பன் (40). இவரது மகன் தனுஷ் (9). இவன் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
 
கடந்த சில தினங்களுக்கு முன்பு தனுஷ், தனது தந்தையின் செல்போனுக்கு வந்ததை அடுத்து, மின் இணைப்பை துண்டிக்காமல்  அழைப்பை எடுத்து பேச முயன்றபோது, செல்போன் வெடித்து சிதறியது.
 
இதில் தனுஷின் கை மற்றும் முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. இதனால் அவர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 

 
தனுஷின் 2 கண்களிலும் பலத்த காயம் ஏற்பட்டதால் எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அவனுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த சிறுவனின் உடல்நலத்தை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து விசாரித்தார்.
 
பின்னர், இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், ”செல்போனை சார்ஜ் செய்து கொண்டே பேசியபோது அந்த செல்போன் வெடித்ததில் 9 வயது சிறுவன தனுஷ் தன் கண் பார்வையை இழந்து படு காயமுற்ற சம்பவம் என் மனதை உலுக்கி விட்டது.
 
எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அச்சிறுவனை சந்தித்து நலம் விசாரித்து, பெற்றோருக்கும் ஆறுதல் கூறினேன். கண் பார்வை பாதிப்புக்குள்ளான அச்சிறுவனை பார்த்து வேதனை அடைந்தேன்.
 
இதுபோன்ற எதிர்பாராத அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க செல்போனை சார்ஜில் போட்டுக் கொண்டே இனி யாரும் தயவு செய்து பேச வேண்டாம் என்று அனைவரையும் அன்புடன் கேட்டு கொள்வதாக தெரிவித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.