வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (22:59 IST)

கல்லில் நார் உரிக்க முயலாதீர்: சொல்கிறார் கருணாநிதி

கல்லில் நார் உரிக்க முயலாதீர்: சொல்கிறார் கருணாநிதி

கல்லில் நார் உரிக்க முயலாதீர் என தனக்கே உரிய உவமையைச் சொல்லி போட்டுத்தாக்கியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
 

 
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழகச் சட்ட மன்ற தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்கிடையே தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துக் கடைசியாகப் பொங்கியெழுந்து இந்த அரசுக்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்தி உள்ளார்கள்.
 
குறிப்பாக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், சத்துணவு - அங்கன்வாடிப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம், மறியல், வேலை நிறுத்தம் என்று தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
 
போராடுபவர்களின் நெருக்கடியான நிலைகள் குறித்து நானும், தமிழகத்திலே உள்ள மற்ற எதிர்க் கட்சிகளும் எடுத்துக் காட்டியும் அவர்களை அழைத்துப் பேசுவதற்கு முதல் அமைச்சருக்கு மனம் வரவில்லை. ஒரு சில அமைச்சர்கள் பேசுவதாக அழைத்துப் பேசி விட்டு முதலமைச்சரைக் கேட்டு முடிவெடுப்பதாகக் கூறிக் கை கழுவி விட்டுப் போய் விடுகிறார்கள்.
 
அதிமுக ஆட்சியின் சர்வாதிகார, பழி வாங்கும் அணுகு முறையை எண்ணிப் பார்த்து, போராட்டத்தில் ஈடுபட்டிருப்போர் அனைவரும் அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, பணிக்குத் திரும்பி மக்கள் நலனுக்கான பணியைத் தொடர்ந்து ஆற்றுவதுதான், அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் நல்லது. காலம் கனியும், காரியம் கை கூடும், காத்திருப்பீர் என்ற கருத்தை இந்த நேரத்தில் தெரிவிப்பது என்னுடைய கடமை எனக் கருதுகிறேன் என தெரிவித்துள்ளார்.