வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 12 ஜனவரி 2016 (11:45 IST)

பட்டப்பகலில் திமுக பிரமுகரை துப்பாக்கியால் சுட்டும் அரிவாளால் வெட்டியும் கொலை முயற்சி : சென்னையில் பரபரப்பு

திமுக பிரமுகர் மீது துப்பாக்கிச் சூடு

திமுக வட்டச் செயலாளர் ஒருவரை, பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளல் வெட்டியும் ஒரு கும்பல் கொலை முயற்சி செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை சைதாப்பேட்டை குமரன் நகரில் வசிப்பவர் ஜெகநாதன்(51). இவர் 140 வது வட்ட திமுக துணைச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.  இவருக்கு கல்லூரியில் படிக்கும் இரண்டு மகள்கள் உண்டு. ஒரு காலத்தில் ரவுடியாக இருந்தார். இவர் மீது ஒரு கொலை வழக்கு உட்பட 12 வழக்குகள் காவல்நிலையத்தில் உள்ளன. அதன் பின், குழந்தைகள் வளர்ந்ததும், ரியல் எஸ்டேட் மற்றும் பில்டிங் காண்ட்ராக்டர் தொழிலுக்கு மாறினார்.
 
இவர் நேற்று காலை எட்டு மணியளவில், பழைய மாம்பலம் சாலையில், மோட்டர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். வண்டியை அவரிடம் வேலை செய்யும் கோவிந்த என்பவர் ஓட்டினார். ஜெகநாதன் பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில், சாலையின் ஓரத்தில் காரில் மறைந்திருந்த ஒரு கும்பல் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டது. அதில் ஒரு குண்டு அவரின் கழுத்திலும், இன்னொரு குண்டு தோள்பட்டையிலும் பாய்ந்தது.
 
இதில் நிலைகுலைந்த அவர் கீழே விழுந்தார். உடனே நான்கு பேர் கொண்ட கும்பல், கையில் அரிவாள் மற்றும் கத்தியுடன் அவரை நோக்கி ஓடி வந்தனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கோவிந்த் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஜெகநாதனும் அவர்களிடமிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். ஆனால் அவர்கள் அவறை சுற்றி வளைத்து சராமரியாக வெட்டி விட்டு, அங்கிருந்து காரில் தப்பிவிட்டது.
 
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள், அதிர்ச்சியில் உறைந்தனர். கடைகள் உடனடியாக மூடப்பட்டன. காவல்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தரப்பட்டது. போலிசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து, அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், ராயப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
கடந்த மே மாதம் அவரது வீட்டின் அருகே, அவர் மீது வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி நடந்தது. அதில் அவர் தப்பி விட்டார். மேலும், கடந்த 4 ஆம் தேதி அவர் தன் பிறந்தநாளை கொண்டாடும் போதும், அவரை கொல்ல முயற்சிகள் நடந்தன. அப்போதும் அவர் தப்பினார். ஆனால் இப்போது அந்த கும்பலிடம் சிக்கியுள்ளார் ஜெகநாதன்.
 
போலிசாரின் விசாரணையில் அவருக்கும் சென்னையின் பிரபல ரவுடி சி.டி.மணி என்பவருக்கும் ஒரு நிலம் தொடர்பாக பிரச்ச்னை இருந்து வருவதும், அவர்தான், கூலிப்படையினரை அனுப்பி ஜெகநாதனை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.  ஜெகநாதனை மே மாதம் வெடிகுண்டு வீசிய வழக்கில் சி.டி.மணி மற்றும் அவரது ஆட்கள் 10 ஏற்கனவே கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 
 
ஜெகநாதனை துப்பாக்கியால் சுட்ட கும்பலை பிடிக்க, துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையில் ஐந்து தனிப்படையினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். 
 
அவர்கள், இந்த கொலை தொடர்பாக இதுவரை நான்கு பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் ரவுடி சி.டி.மணியின் நண்பர்களாவர். அவர்களிடம் நடத்திய விசாரனையில், ஜெகநாதனை துப்பாக்கியால் சுட்டவர் வினோத் என்பது தெரியவந்தது.
 
போலீசாரிடம் வினோத் அளித்த வாக்குமூலத்தில் ‘‘வேளச்சேரியில் சி.டி. மணிக்கு நெருக்கமான ஒருவர், ஜெகநாதனை தீர்த்துக்கட்ட சிறையில் இருந்தவாறே சி.டி. மணி தனக்கு உத்தரவிட்டிருப்பதால், உடனடியாக ஜெகநாதனை கொலை செய்யுங்கள் என்று எங்களிடம் கூறினார். அதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்தோம். நான்தான் அவரை துப்பாக்கியால் சுட்டேன்” என்று ஓப்புக்கொண்டார். 
 
அதையடுத்து, வினோத் வைத்திருந்த கைத்துப்பாக்கியையும், அவரிடம் இருந்த மூன்று தோட்டாக்களையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், ஜெகநாதனை சுட்டது தொடர்பாக மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.