வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 5 ஆகஸ்ட் 2015 (05:46 IST)

மதுவுக்கு எதிராக திமுக போராட்டம்: பெண்களுக்கு கனிமொழி அழைப்பு

ஆகஸ்ட் 10ஆம் தேதி திமுக சார்பில் நடைபெற உள்ள மதுவுக்கு எதிரான போராட்டத்தில் பெண்கள் அதிக அளவில் திரண்டுவர வேண்டும் என திமுக எம்.பி.கனிமொழி அழைப்பு விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், திமுக மகளிர் அணிச் செயலாளருமான கனிமொழி எம்.பி.வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
 
திமுக சார்பில் ஆகஸ்ட் 10ஆம் தேதி திங்கட்கிழமை அன்று, தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில், மாவட்டக் கழகச் செயலாளர் தலைமையில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த கோரி, அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
 
தமிழக மக்களின் ஒரு மித்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில், இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
 
மதுவிற்கு அடிமையாகும் பலர் தங்கள் வருமானத்தில் பெரும் பகுதியை அதற்காகவே செலவு செய்து வருகின்றனர். இதனால் பல குடும்பத்தின் பொருளாதாரம், குழந்தைகளின் கல்வி ஆகியவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
 
இந்த அவலத்தால் அதிக அளவில் பாதிக்கப்படுவது பெண்கள்தான். பெண்களின் மீதான வன்முறை, சட்ட ஒழுங்கு சீர்கேடு, பாலியல் கொடுமைகள் இவற்றின் அதிகரிப்பிற்கும் மதுப்பழக்கமே முக்கியக் காரணம் என்பதை யாரும் மறுக்கமுடியது.
 
எனவே மதுவிலக்கு கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறவிருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிரணியினர் அந்தந்த மாவட்டங்களில் அதிக அளவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.