1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 7 ஏப்ரல் 2016 (10:59 IST)

நாகரீகத்தோடு பேச வேண்டும் : கருணாநிதி அறிவுரை

பொதுக் கூட்டங்களில் பேசுபவர்கள் நாகரீகத்தோடு பேச வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவுரை கூறியுள்ளார்.


 

 
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
சேலத்தில் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய நாகை நாகராஜன் என்பவர், இஸ்லாமிய மதம் குறித்து தவறான கருத்துக்களை பேசியதாக வார இதழ் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தலைமை கழகப் பேச்சாளராக நாகை நாகராஜன் என்றொருவர் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இருந்தாலும், கழக மேடைகளில் உரையாற்றுவோர் நமது இயக்கத்திற்குரிய கண்ணியத்தோடும், நாகரீகத்தோடும் பேச வேண்டும்.
 
ஆர்வம் மிகுதியால் மத சம்பந்தமாக ஏதாவது தவறாக பேசினால், அதை மிகைப்படுத்திட, மாற்று கட்சியினர் இருக்கிறார்களோ இல்லையோ, ஒரு சிலர் அதற்காகவே இருக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒன்றை பத்தாக்கி, பத்தை நூறாக்கி கழகத்தின் மீது அவதூறு வீசிட அவர்கள் எப்போது நேரம் கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.
 
எனவே கழக கூட்டங்களில் பேசுவோர் “யாகாவாராயினும் நா காக்க” என்று அய்யன் திருவள்ளுவர் வழங்கியிருக்கும் அறிவுரையை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு பேச வேண்டும்.
 
நாகை நாகராஜன் தவறாக எதுவும் பேசியிருந்தால், அது கழகத்தின் கருத்தல்ல என்று மறுப்புத் தெரிவிப்பதோடு, அந்த குறிப்பிட்ட பேச்சாளரும் இதனையை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு இனி கழக மேடைகளில் மிகுந்த கவனத்துடன் பேச வேண்டும்.
 
என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.