வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 17 மார்ச் 2016 (11:49 IST)

திமுக தலைவர்கள் படம் பதித்த வெள்ளிக் கொலுசுகள்: பறிமுதல் செய்த அதிகாரிகள்

சேலத்தில் திமுக தலைவர்கள் படம் பதித்த 6 கிலோ வெள்ளிக் கொலுசுகளை, தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.


 

 
சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தாதகாபட்டி பகுதியில் திமுக தலைவர் மு.கருணாநிதி, அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் சின்னம் பதித்த வெள்ளிக் கொலுசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் அலுவலர்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
 
இதைத் தொடர்நது, பறக்கும் படை அலுவலர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
 
இந்த சோதனையின்போது, கருங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த வெள்ளிப் பட்டறை உரிமையாளர் கோபாலகிருஷ்ணனின் வீட்டில் திமுக தலைவர் மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மற்றும் உதயசூரியன் சின்னம் பதித்த வெள்ளிக் கொலுசுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
அதன் மதிப்பு 6 கிலோ என்றும் 105 ஜோடி வெள்ளிக் கொலுசுகள் இருந்ததாகவும் பறக்கும் படை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
 
அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் சேலம் மாநகராட்சி ஆணையரும், தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலருமான க.இரா.செல்வராஜிடம் ஒப்படைத்தனர்.
 
அந்த வெள்ளிக் கொலுசுகளின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
தேர்தல் விதிமுறைகளுக்குப் புறம்பாக  தயாரிக்கப்படும் பரிசுப்  பொருட்கள் தேர்தல் ஆணையத்தால் பரிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில், யார் ஆர்டர் கொடுத்தாலும் வெள்ளிப் பொருட்களை தயாரித்துக் கொடுத்து வருவதாகவும், தற்போது அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட கொலுசுகள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கத் தயாரிக்கவில்லை என்றும் கொலுசுகளை வைத்திருந்த கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 
ஆயினும், உரிய விளக்கம் அளித்து வெள்ளிக் கொலுசுகளைப் பெற்றுச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.