1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : செவ்வாய், 1 டிசம்பர் 2015 (18:53 IST)

என்னமோ நடக்குது; ஒன்றுமே புரியலே: கருணாநிதி

தமிழக அரசின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தலைமைச் செயலாளரும், ஆலோசகரும் "போட்டோ" வுக்கு "போஸ்" கொடுக்கத் தவறுவதில்லை. அவர்களுக்கும் இந்த ஆட்சியில் அதுதான் வேலை. என்னமோ நடக்குது; ஒன்றுமே புரியலே. இதுக்கும் அரசாங்கம் என்றுதான் பெயர் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


 
 
 
இதுகுறித்து திமக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
 
அ.தி.மு.க. ஆட்சியில் காவல் துறை தாக்கியவர்களை விட்டு விட்டு, தாக்கப்பட்டவர்கள் மீதே நடவடிக்கை எடுக்கிறதே?
 
என்ன செய்வது? தாக்கியவர்கள் ஆளுங்கட்சிக்காரர்களாக இருந்தால் என்ன செய்வார்கள்? தே.மு.தி.க. சார்பில் கடந்த வாரம் சென்னை மேற்கு மாவட்ட தொண்டர்கள், சென்னை மாநகராட்சியின் துணை ஆணையரிடம் கோரிக்கை மனுவினைக் கொடுக்கச் சென்றபோது, அவர்களை வழி மறித்து ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் தலைமையிலே உள்ள குழுவினர் கடுமையாகத் தாக்கி அனைத்து நாளேடுகளிலும் அந்தச் செய்தி பெரிதாக வந்தது.
 
ஆனால் இந்த அரசு பாதிக்கப்பட்ட தே.மு.தி.க. தொண்டர்கள் மீதே பொய் வழக்கு தொடுத்து நடவடிக்கை எடுத்தது. அந்த அளவுக்கு அராஜகம் தமிழகத்தில் கொடி கட்டிப் பறக்கின்றது! பாதிக்கப்பட்டவர்கள் மீதும், புகார் கொடுக்கப் போகிறவர்கள் மீதும் வழக்கு தொடுப்பதை அ.தி.மு.க. ஆட்சியில் வழக்கமாக்கி வழக்கு தொடுப்பதில் புதிய பாணியைக் கொண்டு வந்து, குற்ற வழக்கு நடைமுறைகளையே தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டார்கள்.
 
முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டடங்களை எல்லாம்கூட காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைப்பதாகச் செய்தி வருகிறதே?
 
எதையாவது திறந்து வைத்தாக வேண்டுமே? என்ன செய்வது? ஏதாவது புகைப்படம் ஏடுகளில் தினந்தோறும் வந்தாக வேண்டுமே? அதனால்தான் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். என்ன செய்வது? அதிகாரிகள் என்ன செய்வார்கள்? அன்றாடம் முதலமைச்சர் எதையாவது திறந்து வைத்ததாக செய்தி வர வேண்டியிருக்கிறதே? பேரவை நடந்தாலாவது, 110வது விதியின் கீழ் எதையாவது எழுதி வைத்து படிக்கச் சொல்லலாம்.
 
இப்போது என்ன செய்வார்கள்? ஒரு கோடி ரூபாய் மதிப்பில்கூட அல்ல, திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் ஆகிய இடங்களில் 26 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 2 உதவி வனப் பாதுகாவலர் குடியிருப்புகளைத் திறந்து வைத்திருக்கிறார் என்றால், ஒரு குடியிருப்பின் மதிப்பீடு 13 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்தான்.  அதைத் திறந்து வைத்து முதலமைச்சர் பெயரில் ஒரு கல்வெட்டு இருக்க வேண்டும். அதைப்போல லட்சக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டடங்களையெல்லாம் காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைக்கத் தொடங்கி விட்டார். இதில் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தலைமைச் செயலாளரும், ஆலோசகரும் "போட்டோ" வுக்கு "போஸ்" கொடுக்கத் தவறுவதில்லை. அவர்களுக்கும் இந்த ஆட்சியில் அதுதான் வேலை. என்னமோ நடக்குது; ஒன்றுமே புரியலே. இதுக்கும் அரசாங்கம் என்றுதான் பெயர்.
 
இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.