வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : புதன், 27 மே 2015 (15:12 IST)

ஜெயலலிதா வழக்கில் கட்டுமான செலவை குறைத்து மதிப்பிட்ட குமாரசாமி: என்.டி.டி.வி. செய்தியை எடுத்துக்காட்டும் கருணாநிதி

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கட்டடங்கள் கட்டுவதற்கான செலவை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி குறைத்து மதிப்பிட்டுள்ளதாக என்.டி.டி.வி. செய்தி வெளியிட்டுள்ளது.
 

 
அது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:-
 
NDTV, தொலைக்காட்சி தெரிவித்த செய்தியில், வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா வாங்கிக் குவித்த சொத்தின் மதிப்பீடு, கட்டடங்களின் தளம் போடுவதற்கான செலவை மாற்றி அமைத்ததில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
 
28 கோடி ரூபாய்க்கு கட்டுமானச் செலவு செய்து, கட்டடங்கள் கட்டப்பட்ட நிலையில், நீதிபதி குமாரசாமி அதை மிகவும் குறைத்து 5 கோடி ரூபாயாகக் குறைத்து விட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதை நிரூபிப்பதற்கான ரசீதுகளையோ, வவுச்சர்களையோ, பொறியாளர்களின் அறிக்கைகளையோ, கட்டடம் கட்டியவரின் அறிவிப்புகளையோ தாக்கல் செய்யவில்லை என்றும் "டைம்ஸ் ஆப் இந்தியா" விளக்கியிருக்கிறது.
 
கட்டுமானப் பொருட்களுக்கு அரசு நிர்ணயித்திருக்கும் விலையை நீதிபதி குமாரசாமி ஏற்றுக் கொள்ளாதது தவறு என்றும், கட்டுமானப் பொருள்களுக்கும் அரசின் பொதுப்பணித்துறை நிர்ணயிக்கும் விலையைத் தான் நீதிமன்றங்கள் அனைத்தும் ஏற்றுக்கொண்டு வரும் நிலையில், நீதிபதி குமாரசாமி அவர்கள் பொதுப்பணித்துறை நிர்ணயம் செய்த தொகையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது, ஏதோ நீதிபதி வலிந்து குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு அனுசரணையாக முக்கியமான தீர்ப்புகளையும், சட்டங்களையும் மீறி முடிவெடுத்துள்ளாரோ என்று சந்தேகிக்க வைக்கிறது.
 
நீதிபதி குமாரசாமி அவர்களே தனது தீர்ப்பு, பக்கம் 875இல் "பின் யோசனையில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்கு நம்பத்தக்கதல்ல" என்றும்; "பல ஆண்டுகளாக வருமான வரிக் கணக்கையே தாக்கல் செய்யாமல் இருப்பது வருமான வரி செலுத்த வேண்டியவரின் உரிமையைப் பறித்து விடுகிறது. நீண்ட காலத் தாமதத்திற்குப் பின் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதும், உரிய நேரத்தில் தாக்கல் செய்யாது இருப்பதும் "நமது எம்.ஜி.ஆர்." சந்தா திட்டத்தின் உண்மைத் தன்மையில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது" என்றும் கூறிவிட்டு, "நமது எம்.ஜி.ஆர்." சந்தா திட்டத்தின் மூலமாக 4 கோடி ரூபாய் வருமானத்தை ஏற்றுக் கொண்டிருப்பது முன்னுக்குப் பின் முரணானது ஆகும்.
 
இது எப்படியிருக்கிறதென்றால், ஒருவர் தன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் வரை, காத்திருந்து விட்டு அதற்குப் பின்னர் அடையாளம் காட்ட முடியாத வருமானத்தையெல்லாம் இணைத்து வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்து விட்டால், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்ற எண்ணத்தோடு, "நமது எம்.ஜி.ஆர்." சந்தா திட்டமே உருவாயிற்றோ என்று எண்ணத் தோன்றுகிறதா இல்லையா? இப்படிச் செய்வதால் நமது சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புகளில் ஏற்படும் தாக்கத்தை நீதித்துறை விழிப்புணர்வோடு உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அந்த ஓய்வு பெற்ற நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.
 
என்.டி.டி.வி., தொலைக்காட்சி தெரிவித்த செய்தியில், வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா வாங்கிக் குவித்த சொத்தின் மதிப்பீடு, கட்டடங்களின் தளம் போடுவதற்கான செலவை மாற்றி அமைத்ததில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது என்றும், சதுர அடிக்கு 310 ரூபாய் என்பது 250 ரூபாயாகக் குறைக்கப்பட்டதால், 22 கோடி ரூபாய் குறைந்துள்ளது என்றும் அம்பலப்படுத்தியிருக்கிறது.
 
உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கருணானந்தி, "உச்ச நீதிமன்றம் கிருஷ்ணானந்த் அக்னிகோத்ரி வழக்கில் வழங்கிய தீர்ப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. வருவாய்க்கு மீறிய சொத்து பத்து சதவிகிதம் வரை இருக்குமானால், குற்றஞ்சாட்டப்பட்டோர், விடுதலை பெற உரிமை உள்ளவர்கள் என்று நீதிபதி குமாரசாமி சுட்டிக் காட்டியிருக்கிறார். ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவில் எந்த இடத்திலும், இவ்வாறு குறிப்பிடப்படவில்லை" என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.