வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : வியாழன், 11 பிப்ரவரி 2016 (18:03 IST)

11 ஆண்டுகளாக பல்வேறு சோதனைகளை சந்தித்தாலும் அது சாதனை: விஜயகாந்த் கடிதம்

11 ஆண்டுகளாக பல்வேறு சோதனை: தொண்டர்களுக்கு விஜயகாந்த் கடிதம்

11 ஆண்டுகளாக பல்வேறு சோதனைகளை சந்தித்தாலும், அதை சாதனைகளாக மாற்றி தேமுதிக.வை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றதில் உங்கள் அனைவரின் பங்கும் மகத்தானது என்று தொண்டர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.

 
 
இதுகுறித்து கட்சி தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்கே’’ எனும் கொள்கை முழக்கத்தோடு, 2005-ம் ஆண்டு லட்சக்கணக் கான தொண்டர்கள் கூடிய மாநாட்டில் தேமுதிக எனும் அரசியல் இயக்கம் துவக் கப்பட்டு, தமிழக மக்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. 
 
நமது இயக்கத்தின் சார்பில் பல மாநாடுகளை நாம் நடத்தியிருந்தாலும், ஒவ்வொரு மாநாடும் அந்தந்த காலக்கட்டத்தில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளன. அந்த வரிசையில் வருகின்ற 20-2-2016 சனிக்கிழமையன்று மாலை 3 மணியளவில் காஞ்சீபுரம் - வேடல் என்ற இடத்தில் நடைபெறவுள்ள தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு உங்கள் அனைவரின் பேராதரவுடன் மாபெரும் வெற்றி பெறும் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 
 
தமிழக அரசியலில் தேமுதிக திருப்புமுனையை ஏற்படுத்தும் சக்தி என்பதை நிரூபிக்கும் வகையில் ‘‘துணிந்திடு, தவறுகளை களைந்திடு, புதிய மாற்றத்திற்கான ஆரம்பம்’’ என்கின்ற லட்சியத்தோடு தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு நடைபெற உள்ளது. இன்று வரை நமது இயக்கத்தின் வளர்ச்சிக்காக கடும் உழைப்பையும், மிகுந்த பொருளாதாரத்தையும் தாங்கள் அளித்துள்ளீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். 
 
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இன்பமும், துன்பமும் மாறி, மாறி வருவதுபோல் நமது இயக்கம் 11 ஆண்டுகளாக பல்வேறு சோதனைகளை சந்தித்தாலும், அதை சாதனைகளாக மாற்றி தே.மு. தி.க.வை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றதில் உங்கள் அனைவரின் பங்கு மகத்தானதாகும். 
 
தமிழகத்தில் இன்று லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது. வறுமையும், வேலையில்லா திண்டாட்டமும் பெருகியுள்ளது. சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது. விவசாயமும், தொழிலும் நலிவடைந்து போய்விட்டது. இந்த நிலையில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு அடித்தளமிடும் வகையில் தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு அமைய வேண்டும். 
 
இந்த மாநாடு வரலாற்றில் இடம் பெறும் வகையில் மாபெரும் வெற்றியை பெற நீங்கள், உங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் மாநாட்டிற்கு வருகைதந்து கலந்துகொள்ள வேண்டும் என அன்புடன் அழைக்கிறேன். காஞ்சி மாநகரில் உங்கள் எல்லோரையும் காண மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.