1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 27 நவம்பர் 2015 (13:31 IST)

தேமுதிக தொண்டர்களை உருட்டி, மிரட்டி, பணியவைக்க முடியாது: விஜயகாந்த் கண்டனம்

தேமுதிக தொண்டர்களை உருட்டி, மிரட்டி, பணியவைக்கலாம் என்றால் அது பகல் கனவாகவே இருக்கும் என்று கூறி, தனது கட்சித் தொண்டர்கள் தாக்கப்பட்டதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.


 

 
இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
தேமுதிக வின் மேற்கு சென்னை மாவட்ட கழக செயலாளர் ஏ.எம்.காமராஜ், சென்னை மாநகராட்சியின், ஆலந்தூர் மண்டல உதவி ஆணையாளர் அவர்களை நேரில் சந்திக்க கைபேசிமூலம் முன் அனுமதி பெற்று, நேற்று ஆலந்தூர் மண்டல அலுவலகத்திற்கு சென்றார்.
 
அந்த மண்டலத்திற்கு உட்பட்ட கண்ணன் காலனியில் உள்ள ஐந்து தெருக்களில் கடந்த பதினைந்து நாட்களாக வீடுகளிலும், சாலைகளிலும் நடந்து செல்லக்கூட முடியாத நிலையில், மழைநீர் தேங்கியுள்ளதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென்றும், பிற தெருக்களில் இருந்து துண்டிக்கப்பட்டு தீவுபோல் உள்ளதென்றும், விமான நிலைய குடியிருப்பு பகுதியில் இருந்தும், தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் இருந்தும், கழிவுநீர் அந்த இடத்தில் தேங்கியுள்ளதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், அதனால் உடனடியாக மாநகராட்சியின் மூலம் தேங்கியுள்ள மழைநீரையும், கழிவுநீரையும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளிப்பதற்காக சென்றார்.
 
அப்போது ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் இருந்த, அத்தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கட்ராமன் மற்றும் அவருடன் இருந்த அதிமுக குண்டர்களும் சேர்ந்து, பயங்கர ஆயுதங்களுடன் மனு அளிக்க வந்தவர்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
 
அங்கே இருந்த காவல்துறையினரும், அதிமுக வினருடன் சேர்ந்து கொண்டு காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
 
இதுபோன்ற சம்பவத்தால் தேமுதிக தொண்டர்களை உருட்டி, மிரட்டி, பணியவைக்கலாம் என்றால் அது பகல்கனவாகவே இருக்கும். இதற்கெல்லாம் தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும், அச்சமடையவோ, பயப்படவோ மாட்டார்கள்.
 
மழை நீரையும், கழிவுநீரையும் அகற்றக்கோரி மனுக்கொடுக்க வந்தது தேசதுரோக குற்றமா? எதற்காக அவர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும்? ஏவல்துறையாக மாறியுள்ள காவல்துறையும், அதிமுக வினருடன் சேர்ந்து தாக்குதல் நடத்தவேண்டிய அவசியம் என்ன?
 
அதிமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கின் லட்சணம் இதுதான் என்பது, நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். மேலும் தாக்குதலில் காயமடைந்தவர்களின் புகாரை பெறுவதற்கு காவல்துறை மறுத்துள்ளது.
 
படுகாயம் முற்று மருத்துவமனைக்கு சென்றவர்களுக்கு, சிகிச்சை அளிக்கப்படவில்லை, இதற்கெல்லாம் மேலாக குற்றம் செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல், பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்கை திருப்பிப்போடும் அவலமும் நடந்தேறியுள்ளது.
 
மேற்கு சென்னை மாவட்ட கழக செயலாளர் ஏ.எம்.காமராஜ், மாவட்ட கழக துணை செயலாளர் செல்வ ஜோதிலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் செல்வம், ஆலந்தூர் பகுதி கழக செயலாளர் நாராயணன், பகுதி கழக துணை செயலாளர் கலைவாணன், மகளிர் அணி துணை செயலாளர் கலாகலைவாணன், 162 ஆவது வட்ட கழக செயலாளர் வினோத் ஆகியோர் மீது, ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில், எட்டு பிரிவுகளின் கீழ் பொய் வழக்கு போடப்பட்டுள்ளதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
 
இது போன்ற பொய் வழக்குகளை கண்டு அஞ்சுகின்ற தேமுதிக தொண்டர்கள் யாருமில்லை. எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், நீதிமன்றத்தில் நிரூபித்து, அப்பழுக்கு அற்றவர்களாக வெளியே வருவார்கள்.
 
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இதற்கு பொறுப்பேற்று தவறு செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மீதும், அதற்கு துணை போன காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.