வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Updated : வெள்ளி, 17 அக்டோபர் 2014 (14:38 IST)

ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் ஜாமீன், தண்டனையும் நிறுத்திவைப்பு - உச்சநீதிமன்றம் உத்தரவு

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட நால்வருக்கும் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும் நிறுத்தி வைத்துள்ளது. 

மேல் முறையீட்டு மனு விசாரணையை 3 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும். இந்த மனு தொடர்பான ஆவணங்களை 2 மாத காலத்தில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேல் முறையீட்டு மனு விசாரணையைத் தாமதப்படுத்தும் எந்த முயற்சியிலும் ஈடுபடக் கூடாது என்றும் நீதிபதிகள் நிபந்தனை விதித்துள்ளனர். இதனை ஜெயலலிதா தரப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.
 
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து மற்றும் நீதிபதிகள் மதன் பி லோக்கூர், ஏ.கே. சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் வாதாடினார். அவர், 12க்கும் மேற்பட்ட வழக்குகளை உதாரணம் காட்டி, ஜெயலலிதாவுக்கு பிணை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இந்த உத்தரவை அளித்தது.

உச்சநீதிமன்றப் பதிவாளரிடமிருந்து இந்த உத்தரவின் நகல், கர்நாடகத்தின் பரப்பன அக்ரகாரா சிறைச்சாலைக்குச் சென்றடைந்த பிறகு, ஜெயலலிதா விடுவிக்கப்படுவார். கடந்த 20 நாள்களாகச் சிறையில் இருக்கும் ஜெயலலிதா, விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அதிமுக தொடங்கப்பட்டு 43ஆவது ஆண்டு தொடங்கும் நாளில் இந்தத் தீர்ப்பு வந்ததில் அதிமுகவினர் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். போயஸ் கார்டன், அதிமுக தலைமை அலுவலகம் உள்பட தமிழகம் எங்கும் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

முன்னதாக, பெங்களூரில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் 2014 செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்து, பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. அன்றே 4 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். 
 
அதைத் தொடர்ந்து, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த ஜாமீன் மனுக்களை விசாரித்த நீதிபதி சந்திரசேகரா, கடந்த 7ஆம் தேதி ஜாமீன் மனுக்களை நிராகரித்தார். இதையடுத்து, ஜெயலலிதா சார்பில் 9ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் அக், 17 இன்று விசாரணைக்கு வந்தது.