1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 25 அக்டோபர் 2016 (13:19 IST)

ஜெ. குறித்து வதந்தி பரப்பினால் கைது செய்வீர்களா? - உச்சநீதிமன்றம் கேள்வி

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினார்கள் என்பதற்காக, கைது நடவடிக்கை மேற்கொள்வது சரிதானா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக செப்டம்பர் 22-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ஒருமாதத்திற்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஜெயலலிதா உடல்நிலை குறித்து தவறான தகவல்களை பரப்பி, வதந்தி கிளப்பியதாக சென்னை, தூத்துக்குடி, கோவை என பல்வேறு நகரங்களை சேர்ந்த 8 பேரை, தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு எதிர்க்கட்சியினர், சமூக- ஊடக செயற்பாட்டாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் மத்தியிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
 
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எச்.எல். தத்து, நீதிபதி மார்கண்டேய கட்ஜூ உள்ளிட்டோரும் தமிழக போலீசாரின் நடவடிக்கை சரியானதல்ல என்று கருத்து தெரிவித்தனர்.
 
இதனிடையே, வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரி, டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
 
இந்த மனு நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்னிலையில் திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வதந்தி பரப்பினார்கள் என்பதற்காக கைது நடவடிக்கை மேற்கொள்வது சரிதானா என்றும், நிலைமையை இப்படித்தான் காவல்துறை கட்டுப்படுத்துமா? என்றும் தமிழக அரசுக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா கேள்வி எழுப்பினார்.
 
எனினும், இது தொடர்பான டிராபிக் ராமசாமியின் மனுவை விசாரிக்க முடியாது என்று கூறிவிட்ட உச்சநீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்தது.