1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 31 ஜூலை 2016 (12:51 IST)

யுவராஜை பழிவாங்கப் பார்க்கிறார்களா? - தமிழக அரசுக்கு ஈஸ்வரன் கேள்வி

காவல்துறையில் சில அதிகாரிகளுக்கு எதிராக யுவராஜ் கருத்து தெரிவித்த காரணத்தால் பழிவாங்கப் பார்க்கிறார்களா? என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
இது குறித்து ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ் ஆறு மாதங்கள் சிறையிலிருந்தார். ஆறு மாதங்கள் கழித்துத்தான் ஜாமீன் வழங்கப்பட்டது. பல தடவை மறுத்து பின் ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம் தினசரி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு தான் வழங்கியது.
 
நிபந்தனை இன்னும் தளர்த்தப்படவில்லை. வழக்கு விசாரணைக்கு எந்த இடையூறும் யுவராஜ் செய்ததாகத் தெரியவில்லை. வழக்கு விசாரணையை தமிழக காவல்துறை தான் நடத்திக் கொண்டுள்ளார்கள். சட்டம் தன் கடமையைச் செய்து கொண்டிருக்கிறது.
 
இதற்கிடையில் ஜாமீன் கொடுக்கப்பட்டு இரண்டு மாதங்கழித்து, அதை ரத்து செய்ய வேண்டுமென்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது.
 
யுவராஜ் வெளியிலிருக்கக் கூடாது என்று தமிழக அரசு ஏன் முடிவு செய்கிறது. திடீரென்று இப்படியொரு முடிவுக்கு வரக் காரணம் என்ன. இதுபோன்ற எல்லா வழக்குகளிலும் இதுபோன்ற நடைமுறை பின்பற்றப்படுகிறதா? ஜாமீன் தானே கொடுத்திருக்கிறார்கள் வழக்கு முடிந்து தீர்ப்பு வரவில்லையே. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது.
 
தமிழக அரசு நீதிமன்றத்தில் நேர்மையாக வழக்கை நடத்தலாம். யுவராஜ் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டுமென்று தமிழக அரசு உள்நோக்கத்தோடு முயற்சிக்கிறதா. யாராவது தூண்டுகிறார்களா அல்லது காவல்துறையில் சில அதிகாரிகளுக்கு எதிராக யுவராஜ் கருத்து தெரிவித்த காரணத்தால் பழிவாங்கப் பார்க்கிறார்களா?
 
கோகுல்ராஜ் வழக்கு நீதிமன்றத்தில் நேர்மையாக நடக்க வேண்டும். உண்மையான குற்றவாளி யாரென்று நீதிமன்றம் முடிவு செய்யட்டும். ஜாமீனுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது தவிர்க்கப்பட வேண்டியது’’ என்று தெரிவித்துள்ளார்.