வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 26 நவம்பர் 2015 (15:43 IST)

ஜெயலலிதா மழைநீர் காலில் படாமல் வெள்ளத்தை பார்வையிட்டாரா? - விஜயகாந்த் கேள்வி

மழைநீர் காலில்படாமல் மழை, வெள்ளத்தை பார்வையிட்டேன் என்று அறிக்கையின் மூலம் மக்களை ஏமாற்றி வருகிறாரோ? என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”புயல் பாதிப்பே இல்லாமல், மழை வெள்ளத்தால் மட்டுமே மிகப்பெரிய சேதம் ஏற்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் இயங்கும் அதிமுக அரசின் அலட்சிய போக்கே முழுமுதற்காரணமாகும் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
 
இயற்கை வளங்களைப் பற்றி சிறிதும் அக்கறை இல்லாமல், அதிமுக, திமுக ஆட்சி காலங்களில் சுய அரசியல் இலாபத்திற்கும், தேர்தல் கால வாக்கு வங்கியை மனதில் கொண்டும் ஏரிகள், குளங்கள், ஓடைகள் ஆக்கிரமிக்கப்படுவதும், அதில் கட்டிடங்கள் கட்டப்படுவதும், நீர்வரும் வழிகள் அடைக்கப்படுவதும், ஆறுகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் மணலை அள்ளிக்கொண்டு செல்வதும், பெரும்பாலான மரங்களை வெட்டுவதும் போன்ற காரணங்களால்தான் இதுபோன்ற பேரழிவுகள் தமிழகத்தில் தொடர்கிறது.
 
இதுபோன்று இயற்கையை அழித்துக்கொண்டிருந்ததால், தற்போது இயற்கை ஆட்சியாளர்களை அழிக்கத் துவங்கியுள்ளது. அதனால் பாதிப்பவர்கள் முழுக்க, முழுக்க பொதுமக்கள்தான். அவர்களின் பாதிப்பு ஆட்சியாளர்களை அழித்துவிடும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 
 
ஆந்திர மாநிலம் ஐந்து மாதகாலத்தில் 174 கிலோமீட்டர் தூரம் கால்வாய் அமைத்து, கோதாவரி – கிருஷ்ணா நதி நீர் இணைப்பை செய்து நீர் ஆதாரத்தில் தன்னிறைவு அடைந்துள்ளது.
 
ஆனால் காவிரி மற்றும் முல்லை பெரியாறு நீருக்காக கர்நாடக, கேரள மாநிலங்களை எதிர்பார்த்து நிற்கவேண்டிய நிலை தமிழகத்திற்கு உள்ளது. தற்போது பெய்த மழை நீரை சேமிப்பதற்குரிய கட்டமைப்பையும், நதிநீர் இணைப்பையும் செய்திருந்தால் தற்போது பெய்துள்ள மழை நீர் வீணாக சென்று கடலில் கலப்பதை தடுத்து விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தியிருக்கலாம், நீருக்காக அண்டை மாநிலங்களை தமிழகம் எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்காது. 
 
தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்திற்கு பின்பு பெரிய அணைகள், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் போன்ற நீர் ஆதாரங்கள் புதியதாக உருவாக்கப்படவில்லை.
 
அதன் விளைவாக பல ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியும், மதுராந்தகம், செம்பரம்பாக்கம், பூண்டி போன்ற ஏரிகள் நிரம்பி வழிந்தும், எவ்வித பலனும் இல்லாமல், நீர் முழுவதும் கடலில் சென்று வீணானது.  அணைகள் கட்டியும், ஏரிகளை தூர்வாரி ஆழப்படுத்தியும் இருந்தால் நீரையும் சேமித்திருக்கலாம், சேதங்களையும், பாதிப்புகளையும் தடுத்திருக்கலாம்.
 
அதிமுக அரசோ இதையெல்லாம் செய்யாமல் மக்களின் வறுமையை பயன்படுத்தி, அவர்களை ஏமாற்றி, இலவசங்களை கொடுத்து வாக்குகள் பெறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளது.
 
அதனால்தான் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மழைநீர் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது வாக்காள பெருமக்களே என்று பேசினாரோ? மழைநீர் காலில்படாமல் மழை, வெள்ளத்தை பார்வையிட்டேன் என்று அறிக்கையின் மூலம் மக்களை ஏமாற்றி வருகிறாரோ? என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
 
கடலூர் மாவட்டத்தில் மழை, வெள்ள சேதத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் முறையாக போய்ச் சேரவில்லையென்றும், லஞ்சமும், ஊழலும் தலை விரித்தாடுவதாகவும், நிவாரணத் தொகையில் 25 சதவிகிதம் வரை கமிஷனாக பெற்ற பிறகே நிவாரணத் தொகை வழங்கப்படுவதாகவும் பொதுமக்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர்.
 
எனவே அதிமுக அரசு கடும் நடவடிக்கை எடுத்து எவ்வித முறைகேடும் இல்லாமல், நிவாரண பணிகளும், உதவிகளும் வழங்கவேண்டும். நிவாரண பணிகளை கவனமுடன் செயல்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.