வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Modified: புதன், 4 ஜனவரி 2017 (12:22 IST)

சசிகலா எங்கு போட்டியிட்டாலும் அங்கு போட்டியிடும் தீபா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து அடுத்த தலைவர் யார் என்பதில் பொதுமக்கள் மத்தியிலுமின்றி அதிமுக தொண்டர்களிடமும் குழப்பம் நீடித்தது. சசிகலா அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டாலும் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்போடு நடைபெற்றதாக தெரியவில்லை. காரணம் சசிகலாவை தலைவராக ஏற்க அதிமுகவிலும் எதிர்ப்புகள் எழுந்தவண்ணமே உள்ளன. பல பகுதிகளில் அவரது உருவப்படம் அடங்கிய பேனர்களை கிழித்து தொண்டர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.


 

அதிமுகவைச் சேர்ந்த ஒரு பிரிவினர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தலைவராக பொறுப்பேற்கவேண்டும் என்று வலியுறுத்திவருகின்றனர். அவரை ஆதரித்து தமிழகத்தின் பல பகுதிகளில் போஸ்டர்களும், பேனர்களும் காணப்படுகின்றன. இந்நிலையில்  முதல்வரக சசிகலா பொறுப்பேற்கவேண்டும் என்று முக்கிய அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இந்த பரபரப்பான சூழ் நிலையிலும் கூட தீபா எந்த ஒரு நிலைபாட்டையும் அறிவிக்காமல் அமைதியாக உள்ளார். இதையடுத்து அதிமுக தொண்டர்கள் தி நகரில் உள்ள தீபா இல்லத்திற்கு படையெடுத்து வருகின்றனர். அங்கு புரட்சி தலைவி வாழ்க என்றும், கட்சி பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் தொண்டர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர். இதையடுத்து தொண்டர்களிடம் தன்னை ஆதரிப்பதற்கு தீபா நன்றி கூறினார். மேலும் இன்னும் சில வாரங்களில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் தனது அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய நபர்களிடம் தீபா விவாதித்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களிடம் பேசும்போது, சசிகலா எம்.எல்.ஏ. ஆனால்தான் முதல்வராக நீடிக்க முடியும். அவர் எங்கு போட்டியிட்டாலும் அங்கு போட்டியிடுவேன். என்னை பற்றி மக்களுக்கு தெரியும். குறிப்பாக பெண்கள் ஆதரவு நிச்சயம் எனக்கு கிடைக்கும் என்று கூறினாராம்.

தீபாவின் இந்த முடிவு அதிமுகவைச் சேர்ந்த சிலருக்கு நிச்சயம் தலைவலியை கொடுக்கபோகிறது என்பது மட்டும் உண்மை.