தீபாவை முதல்வராக்குவதே தனது கடமை: திடீர் பல்டி அடித்த மாதவன்!

தீபாவை முதல்வராக்குவதே தனது கடமை: திடீர் பல்டி அடித்த மாதவன்!


Caston| Last Modified ஞாயிறு, 19 மார்ச் 2017 (19:26 IST)
புதிய கட்சி ஆரம்பிக்கப்போவதாக அறிவித்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன், தற்போது தீபாவை முதல்வராக்குவது தான் தனது கடமை என திடீரென பல்டி அடித்திருப்பது அவரது ஆதரவாளர்களை குழப்பமடைய வைத்துள்ளது.

 
 
ஜெயலலிதா இறந்த பின்னர் அவரது அண்ணன் மகள் தீபாவை அரசியல் மேகம் சூழ்ந்தது, இதனை பயன்படுத்தி அவரும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை உருவாக்கினார். ஆரம்பம் முதலே அவரது கணவர் மாதவனும் அவருக்கு துணையாக இருந்து செய்தியாளர்களை சந்தித்து வந்தார்.
 
இந்நிலையில் தீபா ஆரம்பித்த பேரவைக்கு அவரது டிரைவரையும், தோழியையும் முக்கிய பொறுப்பாளர்களாக நியமித்ததையடுத்து பல்வேறு குழப்பங்கள் நிலவியது. இதனையடுத்து ஜெயலலிதா சமாதிக்கு வந்த தீபாவின் கணவர் மாதவன் செய்தியாளர்களை சந்தித்து தீபாவின் பேரவையில் சில தீய சக்திகள் ஊடுறுவியுள்ளதாகவும், இதனால் தீபாவால் தனித்து செயல்பட முடியவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
 
மேலும் தான் விரைவில் புதிய கட்சி ஒன்றை ஆரபிக்க உள்ளதாக அதிரடியாக கூறினார். இதனையடுத்து தனது கணவரை தன்னிடம் இருந்து பிரிக்க சசிகலா கோஷ்டி சதி செய்து வருவதாக தீபா கூறினார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்தன.
 
இந்நிலையில் இன்று திருவொற்றியூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாதவன், அதிரடி திருப்பமாக தீபாவை முதல்வராக்குவது தான் தனது கடமை என பல்டி அடித்துள்ளார். இது தீபாவின் ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :