செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 18 டிசம்பர் 2014 (15:25 IST)

கத்தோலிக்க திருச்சபையில் தலித் தீண்டாமை தலை விரித்து ஆடுகிறது - திருமாவளவன் குற்றச்சாட்டு

கத்தோலிக்க திருச்சபையில் தலித் தீண்டாமை தலை விரித்து ஆடுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
 
சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “கத்தோலிக்க திருச்சபையில் தலித் தீண்டாமை தலை விரித்து ஆடுகிறது. தமிழகத்தில் 36 லட்சம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் உள்ளனர். இதில் 22 லட்சம் பேர் தலித் கிறிஸ்தவர்கள்.
 
கத்தோலிக்க மறை மாவட்ட நிர்வாகம், திருச்சபை நிர்வாகம், தலித் இல்லாதவர் கையில் உள்ளது. அதனால் தேவாலயங்களில் தலித்துகளுக்கு வழிபாடு மறுக்கப்படுகிறது. தலித் குடியிருப்பு வழியாக தேர் இழுத்து செல்லவும் மறுக்கிறார்கள். தலித்துகளுக்கு தனி சுடுகாடு உள்ளது.
 
சிவகங்கை மறை மாவட்டத்தை சேர்ந்த மைக்கேல் ராஜாவுக்கு 13 ஆண்டு காலமாக போதகர் பட்டம் வழங்க படாமல் இழுத்தடிக்கப்படுகிறார்கள். கத்தோலிக்க திருச்சபையில் தீ வைக்கப்படுகிற தீண்டாமை கொடுமைகளை எதிர்த்து தீண்டாமை ஒழிப்பு மாநாடு மார்ச் மாதம் சிவகங்கையில் நடக்கிறது. இதில் மைக்கேல் ராஜாவுக்கு போதகர் பட்டம் வழங்க வலியுறுத்துவோம்.
 
இந்து மதத்தில் ஜாதிக்கொடுமை இருப்பது போல கத்தோலிக்க திருச்சபையிலும் ஜாதிக்கொடுமை இருக்கிறது. இது பற்றி போப் ஆண்டவர் கவனத்துக்கு எடுத்துச்செல்ல இருக்கிறோம். தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் கத்தோலிக்க திருச்சபையில் உள்ள தீண்டாமையை தடுத்து நிறுத்த வலியுறுத்துகிறோம்.
 
நரேந்திர மோடி அரசு இந்துத்துவாவை வெளிப்படுத்தும் அரசாகவே திகழ்கிறது. இந்துத்துவா பாசிச கொள்கைகளை திணிப்பதில் ஆர்வமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.