வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 5 ஜூலை 2015 (00:51 IST)

அமைச்சர் ஓ.பி.எஸ். சகோதர் ஓ.ராஜா தீண்டாமை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

பூசாரியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் முன்னாள் முதல்வரும், தற்போதைய நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா நீதி மன்றத்தில் ஆஜரானார்.
 
பெரியகுளம் அருகேயுள்ள தேவதானம்பட்டி கைலாசநாதர் கோயில் பூசாரி நாகமுத்து என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது, தமிழக நிதியமைச்சரான ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜாவின் ‘டார்ச்சர்’ காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி வைத்து பூசாரி நாகமுத்து இறந்து விட்டார்.
 
இந்நிலையில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஓ.ராஜா உள்பட 7 பேர் மீது தென்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ராஜா உள்பட 7 பேர் மீது பெரியகுளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 3 ஆம் தேதி குற்றப்பத்திரிகை  தாக்கல் செய்யப்பட்டது.
 
இதனையடுத்து, ஓ.ராஜா முன்ஜாமீன் கேட்டு ராஜா, தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், ராஜாவுக்கு முன்ஜாமீன் வழங்கியது.
 
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஒ.ராஜா உள்ளிட்ட 7 பேரும் இரண்டாம் கட்ட விசாரணைக்காக பெரியகுளம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாரியப்பன், இந்த வழக்கை தேனி மாவட்ட ஒருங்கினைந்த நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
 
மேலும் , ஆகஸ்ட் 10 ஆம் தேதி அன்று, மாவட்ட ஒருங்கினைந்த நீதி மன்றத்தில் உள்ள தீண்டாமை வன்கொடுமை தடுப்பு நீதித்துறை நடுவர் முன்பாக குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.