வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 29 ஏப்ரல் 2015 (12:23 IST)

ஆன்லைன் வணிகத்தால் பருப்பு விலை உயர்வு: கட்டுப்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்

பருப்பு வகைகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
தமிழ்நாட்டில் அனைத்து வகை பருப்புகளின் விலையும் கடந்த சில நாட்களில் மட்டும் கிலோவுக்கு ரூ.25 வரை அதிகரித்துள்ளன. சர்க்கரை உள்ளிட்ட பிற அத்தியாவசிய பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது.
 
அடுத்த சில வாரங்களில் இப்பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வணிகர்கள் கூறியுள்ளனர். மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வு கவலையளிக்கிறது.
 
துவரம் பருப்பின் விலை கடந்த மாதம் வரை கிலோ ரூ.100 ஆக இருந்தது. ஆனால், இப்போது ரூ.125 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல் உளுத்தம் பருப்பின் விலை கிலோ 90 ரூபாயிலிருந்து ரூ.115 ஆக உயர்ந்திருக்கிறது. கடலை பருப்பின் விலை கிலோ 50 ரூபாயிலிருந்து ரூ. 60 ஆக அதிகரித்திருக்கிறது.
 
சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.2 வரையிலும், வெல்லம் விலை கிலோவுக்கு 5 ரூபாயும் உயர்ந்திருக்கிறது. பூண்டு விலை கிலோவுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. ஏற்கனவே மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, காய்கறி விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
 
இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழவே முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பருப்பு வகைகளின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்திருப்பது ஏழை மக்களை பேரிடியாக தாக்கியிருக்கிறது.
 
பருப்பு வகைகளின் விலை உயர்வுக்கு விளைச்சல் குறைவும், ஆன்லைன் வணிகம் மூலம் சிலர் பெருமளவில் வாங்கி பதுக்கி வைத்திருப்பதும் காரணம் என்று கூறப்படுகிறது. விளைச்சல் குறைவால் ஏற்படும் தட்டுப்பாட்டை தடுக்க முடியாது.
 
ஆனால், பருப்பு வகைகளை வாங்கி பதுக்கி வைப்பதன் மூலம் செயற்கையாக ஏற்படுத்தப்படும் தட்டுப்பாட்டை தடுக்கவும், போக்கவும் தமிழக அரசால் முடியும். ஆனால், இதற்காக சிறு துரும்பைக் கூட தமிழக அரசு கிள்ளிப்போடாதது கண்டிக்கத்தக்கதாகும்.
 
வெளிச்சந்தையில் ஏதேனும் ஒரு பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது அதை சமாளிப்பதற்கான ஒரே வழி தட்டுப்பாடுள்ள பொருட்களை அரசு நிறுவனங்களின் மூலம் தாராளமாக வினியோகிப்பது தான். ஆனால், இதற்கு நேர் எதிரான செயலை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது.
 
சிறப்பு பொது வினியோகத்திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றின் வினியோகத்தை தமிழக அரசு பாதிக்கும் கீழாக குறைத்து விட்டது.
 
ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் வழங்கப்பட வேண்டிய துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பின் அளவில் 40 முதல் 50 விழுக்காடு அளவுக்கு மட்டுமே அரசு ஒதுக்கீடு செய்கிறது. கடந்த 6 மாதங்களாகவே இதே நிலைதான் காணப்படுகிறது. பல நியாயவிலைக் கடைகளில் பருப்புகளே வழங்கப்படுவதில்லை.
 
நியாய விலைக் கடைகளில் வழங்குவதற்காக ஒவ்வொரு மாதமும் 13,461 டன் துவரம் பருப்பும், 9,000 டன் உளுத்தம் பருப்பும் தேவை என்று தமிழக அரசு உணவுத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
 
ஆனால், கடந்த சில மாதங்களில் மாதத்திற்கு சராசரியாக 17,500 டன் துவரம் பருப்பும், 9000 முதல் 9500 டன் உளுத்தம் பருப்பும் தமிழக அரசு நுகர் பொருள் வாணிபக் கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது.
 
தேவைக்கு அதிகமாகவே பருப்பு வகைகள் கொள்முதல் செய்யப்பட்டும் நியாய விலைக் கடைகளில் பருப்பு வினியோகிக்கப்படாததற்கு காரணம் என்ன? வாங்கப்பட்ட பருப்பு வகைகள் என்ன வாயின? என்பதெல்லாம் ஆட்சியாளர்களுக்குத்தான் வெளிச்சம்.
 
நியாயவிலைக் கடைகளில் பருப்பு வகைகள் தாராளமாக வினியோகிக்கப்பட்டால் தான் வெளிச்சந்தையில் பருப்புக்கான தேவை குறைந்து விலையும் குறையும். தமிழக அரசிடம் பல மாதங்களுக்குத் தேவையான துவரம் பருப்பும், உளுத்தம் பருப்பும் இருப்பதால், வெளிச்சந்தையில் விலை குறையும்வரை, அவற்றை குடும்ப அட்டைகளுக்கு தலா 2 கிலோ வீதம் வழங்க அரசு முன்வர வேண்டும்.
 
அதேபோல், நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யப்படாத பொருட்கள் பதுக்கப்படுவதை தடுத்தும், பதுக்கப்பட்டதை மீட்டும் வெளிச்சந்தையில் விலையை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு ராமதாஸ் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.