வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 25 ஜூன் 2016 (14:48 IST)

ரிலையன்ஸுக்கு அதிகாரம் அளித்தது யார்? - முத்தரசன் கேள்வி

நாட்டு மக்களுக்கு சொந்தமான 381 கோடி ரூபாயை ரிலைன்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்திட வங்கிக்கு அதிகாரம் அளித்தது யார் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
இதுகுறித்து முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய அரசின் முடிவின் படி, ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டது. தேசவுடமை வங்கிகளே மாணவர்களுக்கு கடன் வழங்கியுள்ளது. கடன் பெற்ற மாணவர்கள் கல்விக் கடனை திருப்பிச் செலுத்த கடமைப்பட்டவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.கடன் பெற்று படித்து பட்டம் பெற்றுவிட்டார்கள்.
 
தேர்வானவர்கள் கடனை திருப்பிச் செலுத்த வேண்டுமெனில் எவ்வாறு செலுத்துவது தாங்கள் கற்ற கல்விக்கேற்ப வேலை கிடைத்து இருந்தால், தங்களுக்கு கிடைக்கும் ஊதியத்திலிருந்து ஒரு பகுதியை தாங்கள் பெற்ற கடன் தொகைக்காக, வங்கிக்கு திருப்பிச் செலுத்துவார்கள். வேலை கிடைக்காத நிலையில் எவ்வாறு திருப்பிச் செலுத்திட இயலும் என்பது குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும்.
 
ஸ்டேட் வங்கி மாணவர்களுக்கு கொடுத்த கல்விக் கடன் 847 கோடி ரூபாய் ஆகும். இத்தொகை நாட்டு மக்களுக்கு சொந்தமானது. இத்தொகையினை 381 கோடி ரூபாய்க்கு ரிலைன்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்திட வங்கிக்கு அதிகாரம் அளித்தது யார்? மாணவர்களிடமிருந்து 847 கோடி ரூபாய் வசூலிக்கும் ரிலைன்ஸ் நிறுவனம் வங்கிக்கு செலுத்தும் தொகை ரூ. 381 கோடி மட்டுமே அதனையும் நிறுவனம் மொத்தமாக வங்கிக்கு செலுத்தாது.
 
மாறாக வெறும் 54 கோடியை மட்டும் செலுத்திவிட்டு பாக்கித் தொகையான 327 கோடி ரூபாயை 15 ஆண்டுகளில் செலுத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமா அல்லது ரிலையன்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றதா?
 
பாரத ஸ்டேட் வங்கி தொடர்ந்து ஏழைகளுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றது. அண்மையில் வங்கியில் காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்திட வேலைக்கு ஊழியர்களை நியமனம் செய்திட விளம்பரம் செய்த போது கல்விக் கடன் பெற்றவர்கள் விண்ணப்பம் செய்திடக் கூடாது என்று விளம்பரம் செய்தது.
 
பாரத ஸ்டேட் வங்கியின் இத்தகைய செயல்பாடுகளை வன்மையாக கண்டிப்பதுடன், ரிலைன்ஸ் நிறுவனத்துடன் வங்கி செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை உடன் ரத்து செய்திட மத்திய அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
 
மாணவர்கள் பெற்றுள்ள கடனை திருப்பிச் செலுத்திட இயலாத நிலையில் உள்ள மாணவர்களின் கடன்களை அரசே ஏற்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.