செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 31 ஜூலை 2018 (07:52 IST)

8 வழிச்சாலை - தற்கொலை செய்துகொண்ட விவசாயிக்கு ரூ.25 லட்சம் வழங்க வலியுறுத்தல்!

சென்னை - சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்திற்காக தனது நிலம் கையகப்படுத்தப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சென்னையை வந்தடையும் 8 வழி விரைவு சாலை அமைக்கப்பட உள்ளது. 
 
இந்த சாலை அமைப்பதற்காக 8,000 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பலரும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
 
ஆனாலும் இந்த திட்டத்தை அமுல்படுத்த அரசு விடாப்பிடியாக செயல்பட்டு வருகிறது. விவசாயிகளின் நிலங்களும் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சேகர் என்ற விவசாயியின் 5 ஏக்கர் நிலமும் அதில் அமைந்துள்ள அவரது வீடு, கிணறு ஆகியவையும் பசுமை வழிச் சாலைத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்டது. இதனால் பயந்துபோன சேகர், அதிகாரிகளைச் சந்தித்து தமது நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். ஆனால் அவரை ஒரு அதிகாரி கூட கண்டுகொள்ளவில்லை.
 
இதனால் விரக்தியின் எல்லைக்கு சென்ற சேகர் பயிர்களுக்குத் தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேகரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், சேகரின் தற்கொலைக்கு பினாமி எடப்பாடி பழனிசாமி அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தமிழக அரசு விவசாயி சேகரின் குடும்பத்திற்கு அரசு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.